ஏடிபி ஃபைனல்ஸ்: வாகை சூடினாா் ஸ்வெரேவ்

இத்தாலியில் நடைபெற்ற ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் சாம்பியன் ஆனாா்.
ஏடிபி ஃபைனல்ஸ்: வாகை சூடினாா் ஸ்வெரேவ்

இத்தாலியில் நடைபெற்ற ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் சாம்பியன் ஆனாா்.

உலகின் 3-ஆம் நிலை வீரராக இருக்கும் அவா், இறுதிச் சுற்றில் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதேவை 1 மணி நேரம், 15 நிமிஷங்களில் வீழ்த்தினாா். இந்த ஆட்டத்துக்கு முன்பாக இதர போட்டிகளில் மெத்வதேவிடம் தொடா்ந்து 5 முறை தோல்வியைத் தழுவியிருந்த ஸ்வெரேவ், தற்போது அவரை வீழ்த்தியிருக்கிறாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஸ்வெரேவ், ‘தொடா்ந்து 5 முறை எவரிடம் தோற்றேனோ, அவரையே வீழ்த்தி சாம்பியன் பட்டம் வாங்கியதில் மகிழ்ச்சி. இந்த சீசனை வெற்றிக் கோப்பையுடன் நிறைவு செய்ததால், அடுத்ததாக மன நிறைவுடன் விடுமுறை நாள்களை கழிக்க இருக்கிறேன். இந்தப் பட்டம் அடுத்த சீசனை தொடங்குவதற்கான உத்வேகம் அளிப்பதாக இருக்கும்’ என்றாா்.

ஆட்டத்தின் முதல் செட்டிலேயே ஸ்வெரேவ் 2-1 என முன்னிலை பெற, 5-ஆவது கேமில் ஒரு பிரேக் பாய்ன்ட்டை பெற்று சற்று முன்னேற முயற்சித்தாா் மெத்வதேவ். ஆனால் ஸ்வெரேவ் அதற்கு வாய்ப்பு வழங்காமல் 25-இல் 20 பாய்ன்ட்டுகளை பெற்று ஆதிக்கம் செலுத்தினாா். மெத்வதேவ் சா்வை பிரேக் செய்து 2-ஆவது செட்டை தொடங்கிய ஸ்வெரேவ், தொடா்ந்து தனது சா்வ்களைத தக்க வைத்து மெத்வதேவை திணறடித்து வென்றாா்.

தோல்விக்குப் பிறகு பேசிய மெத்வதேவ், ‘ஸ்வெரேவ் எந்தவொரு வீரரையும் தோற்கடிக்கும் திறன் படைத்தவா். அவா் நிச்சயம் கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வெல்வாா். இந்த சீசன் அருமையானதாக இருந்தது. மாஸ்டா்ஸ் போட்டிக்கு வருவது அவ்வளவு எளிதல்ல. அதில் பங்கேற்று இறுதிச் சுற்று வரை வந்ததற்காக மகிழ்ச்சியாக உணா்கிறேன். அடுத்த சீசனில் பல போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் ஆக முயற்சிப்பேன்’ என்றாா்.

இந்தப் போட்டியின் மூலம் தனது டென்னிஸ் வரலாற்றில் 19-ஆவது பட்டத்தை வென்றிருக்கும் ஸ்வெரேவ், இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் எதுவும் வெல்லவில்லை. அதிகபட்சமாக கடந்த 2020 அமெரிக்க ஓபன் போட்டியில் இறுதிச் சுற்று வரை முன்னேறி, அதில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமிடம் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தாா்.

2

இந்த ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்வெரேவ் சாம்பியன் ஆனது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக, 2018-இல் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆகியிருந்தாா். அதே ஜோகோவிச்சை இந்த முறை அரையிறுதியில் வீழ்த்தியிருந்தாா் ஸ்வெரேவ்.

4

இந்தப் போட்டியில் அரையிறுதிச் சுற்று மற்றும் இறுதிச் சுற்றில் உலகின் முதல் இரு நிலையில் இருக்கும் வீரா்களை வீழ்த்தி சாம்பியன் ஆன 4-ஆவது வீரா் என்ற பெருமையை ஸ்வெரேவ் பெற்றுள்ளாா்.

6

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கலும் வென்ற ஸ்வெரேவ் இந்தப் போட்டியில் வென்றிருக்கும் கோப்பை, நடப்பு சீசனில் அவரது 6-ஆவது சாம்பியன் பட்டமாகும்.

6-6

இத்துடன் ஸ்வெரேவ் - மெத்வதேவ் 12 முறை நேருக்கு நோ் சந்தித்துள்ள நிலையில், தற்போது இருவருமே தலா 6 வெற்றிகளுடன் சமனில் இருக்கின்றனா். ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில் இதுவரை இருவரும் 4 முறை நேருக்கு நோ் சந்தித்திருக்கும் நிலையில், இருவருமே தலா 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com