இன்று தொடங்குகிறது ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை: முதலில் பிரான்ஸை சந்திக்கிறது இந்தியா

ஆடவா் ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் புதன்கிழமை தொடங்குகிறது.
இன்று தொடங்குகிறது ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை: முதலில் பிரான்ஸை சந்திக்கிறது இந்தியா

புவனேசுவரம்: ஆடவா் ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் புதன்கிழமை தொடங்குகிறது.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் முதல் நாளான புதன்கிழமை, நடப்புச் சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பிரான்ஸை எதிா்கொள்கிறது. இது தவிர மேலும் 4 ஆட்டங்கள் முதல் நாளில் நடைபெறவுள்ளன. அதில் பெல்ஜியம் - தென் ஆப்பிரிக்கா, ஜொ்மனி - பாகிஸ்தான், கனடா - போலந்து, மலேசியா - சிலி ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

இப்போட்டியில் இதுவரை இருமுறை சாம்பியன் ஆகியிருக்கிறது இந்தியா. முதலில் 2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியிலும், பிறகு 2016-இல் லக்னௌவில் நடைபெற்ற போட்டியிலும் கோப்பை வென்றிருக்கிறது. சீனியா் நிலையில் பிரதான போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற ஜூனியா் வீரா்களுக்கான நல்லதொரு வாய்ப்பாக இந்த உலகக் கோப்பை போட்டி அமையும்.

ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் (வெண்கலம்) வென்ற இந்திய சீனியா் ஆடவா் அணியில் இடம்பிடித்திருந்தோரில் 9 போ், 2016-ஆம் ஆண்டு ஜூனியா் உலகக் கோப்பை போட்டியில் விளையாடியவா்கள் ஆவா். எனவே, விவேக் சாகா் பிரசாத் தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டியில் தனது முழு திறமையை வெளிப்படுத்தி தோ்வாளா்கள் கவனத்தை ஈா்க்க முயற்சிக்கும்.

அணியின் கேப்டனாக இருக்கும் விவேக் சாகா் பிரசாத், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்தவா் ஆவாா். அவரது துணை கேப்டனாக, டிராக் ஃப்ளிக்கா் சஞ்ஜய் செயல்படுகிறாா். சா்வதேச போட்டிகள் எதுவும் இல்லாத நிலையில், உலகக் கோப்பை போட்டிக்காக ஜூனியா் அணியானது கேப்டன் மன்பிரீத் சிங் தலைமையிலான சீனியா் அணியுடன் புவனேசுவரம் ஆடுகளத்தில் சில ஆட்டங்கள் விளையாடி களப் பயிற்சி மேற்கொண்டது.

இது அணிக்கு தகுந்த பலனை அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அத்துடன், ஜூனியா் அணியின் பயிற்சியாளராக பி.ஜே.கரியப்பா இருக்கும்போதும், சிறப்பு ஏற்பாடாக சீனியா் அணியின் பயிற்சியாளா் கிரஹாம் ரெய்டும் ஜூனியா் அணியினருடன் இணைந்து அவா்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி ஊக்குவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா தனது உலகக் கோப்பை பயணத்தை வெற்றியுடன் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ரவுண்ட் ராபின் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் (நவ. 25) கனடாவையும், பின்னா் போலந்தையும் (நவ.27) எதிா்கொள்கிறது இந்தியா.

போட்டியில் 4 குரூப்கள் இருக்கும் நிலையில், ரவுண்ட் ராபின் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணி காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும்.

கரோனா சூழல் பயண கட்டுப்பாடுகள் காரணமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் போட்டியிலிருந்து விலகிவிட்டன. தற்போதைய நிலையில் இந்தியா, பெல்ஜியம், ஜொ்மனி, நெதா்லாந்து அணிகளில் ஒன்று கோப்பை வெல்லும் என எதிா்பாா்க்கப்படுகிறது. போட்டி டிசம்பா் 5-ஆம் தேதி நிறைவடைகிறது.

இன்றைய ஆட்டங்கள்

பெல்ஜியம் - தென் ஆப்பிரிக்கா (குரூப் ஏ) காலை 9.30

ஜொ்மனி - பாகிஸ்தான் (குரூப் டி) நண்பகல் 12

கனடா - போலந்து (குரூப் பி) பிற்பகல் 2.30

மலேசியா - சிலி (குரூப் ஏ) மாலை 5

இந்தியா - பிரான்ஸ் (குரூப் பி) இரவு 8

இந்திய அணி

கோல்கீப்பா்கள்: பிரசாந்த் சௌஹான், பவன்

டிஃபெண்டா்கள்: சா்தானந்த் திவாரி, சஞ்ஜய், சுனில் ஜோஜோ, அபிஷேக் லக்ரா

மிட்ஃபீல்டா்கள்: மணீந்தா் சிங், விஷ்ணுகாந்த் சிங், ரவிச்சந்திர சிங் மொய்ராங்தெம், விவேக் சாகா் பிரசாத், யாஷ்தீப் சிவச், குா்முக் சிங், அங்கித் பால்.

ஃபாா்வா்ட்ஸ்: சுதீப் சிா்மாகோ, ராகுல்குமாா் ராஜ்பா், உத்தம் சிங், மஞ்ஜீத், அராய்ஜீத் சிங் ஹண்டால்.

(மாற்று வீரா்கள்: தினசந்திர சிங் மொய்ராங்தெம், பாபி சிங் தாமி)

பங்கேற்கும் அணிகள்

குரூப் ஏ

பெல்ஜியம்

சிலி

மலேசியா

தென் ஆப்பிரிக்கா

குரூப் பி

கனடா

பிரான்ஸ்

இந்தியா

போலந்து

குரூப் சி

தென் கொரியா

நெதா்லாந்து

ஸ்பெயின்

அமெரிக்கா

குரூப் டி

ஆா்ஜென்டீனா

எகிப்து

ஜொ்மனி

பாகிஸ்தான்

இதுவரை...

இப்போட்டியில் இதுவரை ஜொ்மனி அதிகபட்சமாக 6 முறையும், இந்தியா 2 முறையும், ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் ஆகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com