முகப்பு விளையாட்டு செய்திகள்
முதல் டெஸ்ட்: 4-ம் நாளில் இலங்கை ஆதிக்கம்; மே.இ. தீவுகள் திணறல்
By DIN | Published On : 24th November 2021 07:21 PM | Last Updated : 24th November 2021 07:21 PM | அ+அ அ- |

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றியை நெருங்கியுள்ளது.
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டம் காலேவில் நடைபெற்று வருகிறது. முதல் பேட்டிங் செய்த இலங்கை முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 156 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது.
கேப்டன் திமுத் கருணாரத்னே இதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிக்கு 348 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.
இதையும் படிக்க | டெஸ்ட்: அதிக ரன்களைக் குவித்து வரும் இலங்கை வீரர்
இந்த கடின இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் மீண்டும் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. 18 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்தியத் தீவுகள் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதையடுத்து, போனர் மற்றும் ஜோஷ்வா டி சில்வா 4-ம் நாள் ஆட்டம் முடியும் வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
4-ம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், லசித் எம்புல்டெனியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.