முதல் டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
அஜாஸ் படேல் (இடது)
அஜாஸ் படேல் (இடது)

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயரும் நியூசி. அணியில் ரச்சின் ரவீந்திராவும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்கள். 

முதல் நாள் முடிவில் இந்திய அணி, 84 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் 75, ஜடேஜா 50 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று, ஜடேஜா ரன் எதுவும் சேர்க்காமல் 50 ரன்களில் செளதி பந்தில் போல்ட் ஆனார். அறிமுக டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர், 157 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் சதமடித்தார். சஹா 1 ரன்னில் ஆட்டமிழக்க அதன்பிறகு 105 ரன்களில் செளதி பந்துவீச்சில் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்தார்.

நேற்று காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறி நியூஸி. ரசிகர்களுக்குப் பயத்தை ஏற்படுத்திய டிம் செளதி இன்று 11 ஓவர்கள் தொடர்ச்சியாக வீசினார். இந்த ஆட்டத்தில் நியூசி. அணி மீண்டு வர அவருடைய பந்துவீச்சு பெரிதும் உதவியது. அக்‌ஷர் படேலை 3 ரன்கள் வீழ்த்தினார் செளதி. இது அவருடைய 5-வது விக்கெட். முதல் பகுதியின் கடைசிக்கட்டத்தில் அஸ்வினும் உமேஷ் யாதவும் பொறுப்புடன் விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். அஸ்வின் 5 பவுண்டரி அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

2-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 109 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 38, உமேஷ் யாதவ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மீதமுள்ள இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் அஜாஸ் படேல். அஸ்வின் 38 ரன்களிலும் இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். 

இந்திய அணி 111.1 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி கடைசி 6 விக்கெட்டுகளை 87 ரன்களுக்கு இழந்துள்ளது. நியூசி. தரப்பில் செளதி 5, ஜேமிசன் 3, படேல் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com