Enable Javscript for better performance
draw at Kanpur, New Zealand survives against India in the first Test- Dinamani

சுடச்சுட

    இந்திய அணியின் வெற்றியைப் பறித்த கடைசி விக்கெட்: பரபரப்பான முறையில் டிரா ஆன கான்பூர் டெஸ்ட்!

    By DIN  |   Published on : 29th November 2021 04:41 PM  |   அ+அ அ-   |    |  

    jadeja_AP21333342641341xx

    இந்திய அணி

     

    கான்பூரில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பரபரப்பான முறையில் டிரா ஆகியுள்ளது. 

    இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. 

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 111.1 ஓவர்களில் 345 ரன்கள் எடுத்தது. அறிமுக டெஸ்டில் சிறப்பாக விளையாடி சதமடித்த ஷ்ரேயஸ் ஐயர், 105 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்தின் செளதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டாம் லேதம் 95 ரன்களும் வில் யங் 89 ரன்களும் எடுத்தார்கள். அக்‌ஷர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் 65 ரன்களும் சஹா ஆட்டமிழக்காமல் 61 ரன்களும் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி வெற்றி பெற 284 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்து அணி 4-ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்தது. டாம் லேதம், சோமர்வில் களத்தில் இருந்தார்கள்.

    5-ம் நாளன்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சுலபமாக வீழ்ந்துவிடும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்க வீரர் டாம் லேதமும் நைட்வாட்ச்மேனாகக் களமிறங்கிய சோமர்வில்லும் அபாரமாக விளையாடி, இந்திய அணியின் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார்கள். பலவகையிலும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முயன்றும் தோல்வியே கிடைத்தது. இன்று முதல் 31 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்து ஆச்சர்யப்படுத்தியது நியூசிலாந்து அணி. 

    5-ம் நாளில் உணவு இடைவேளையின்போது நியூசிலாந்து அணி, 35 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது. லேதம் 35, சோமர்வில் 36 ரன்களும் எடுத்துக் களத்தில் இருந்தார்கள். 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 60 ஓவர்களில் 205 ரன்கள் தேவைப்பட்டது. 

    உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்கள். 110 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்கள் எடுத்த சோமர்வில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நன்கு விளையாடி வந்த டாம் லேதம் 52 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங்கைத் தாண்டிச் சென்று அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அஸ்வின் பெற்றார். டெய்லர் 2 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் வீழ்ந்தார்.

    5-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது நியூசிலாந்து அணி, 63.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 159 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் கான்பூர் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை அடைந்தது.

    தேநீர் இடைவேளைக்குப் பிறகு கடகடவென விக்கெட்டுகளை எடுத்தது இந்திய அணி. ஹென்றி நிகோல்ஸ் 1 ரன்னில் அக்‌ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 112 பந்துகளை எதிர்கொண்டு 24 ரன்கள் எடுத்த கேப்டன் வில்லியம்சனை வெளியேற்றினார் ஜடேஜா. விக்கெட் கீப்பர் டாம் பிளெண்டல், 2 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். கடைசி ஒரு மணி நேரத்தில் இந்திய அணி மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினால் வெற்றி என்கிற நிலைமை இருந்தது.

    இதன்பிறகு கைல் ஜேமிசனை 5 ரன்களிலும் டிம் செளதியை 4 ரன்களிலும் வீழ்த்தினார் ஜடேஜா. இதனால் இந்திய ரசிகர்கள் பரபரப்பானார்கள். கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரச்சின் ரவிந்திராவும் அஜாஸ் படேலும் கவனமாக விளையாடினார்கள். அவர்களுடைய விக்கெட்டை எடுக்க இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்கள் பலவழிகளிலும் முயன்றார்கள். எனினும் ரச்சின் ரவிந்திராவும் அஜாஸ் படேலும் 8.4 ஓவர்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுக்காமல் விளையாடி தோல்வியைத் தவிர்த்தார்கள். கடைசியில் இந்திய அணியால் ஒரு விக்கெட்டை எடுக்க முடியாத காரணத்தால் வெற்றியைத் தொட முடியாமல் போனது. இதனால் கான்பூர் டெஸ்ட்  பரபரப்பான முறையில் டிரா ஆனது.

    நியூசிலாந்து அணி 98 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. ரச்சின் ரவிந்திரா 18, அஜாஸ் படேல் 2 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

    டெஸ்ட் தொடர் 0-0 என சமனில் உள்ளது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் டிசம்பர் 3 அன்று தொடங்குகிறது. 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp