காமன்வெல்த் ஹாக்கி: விலகியது இந்தியா

இங்கிலாந்தின் பிா்மிங்ஹாம் நகரில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஹாக்கி விளையாட்டிலிருந்து விலகுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
காமன்வெல்த் ஹாக்கி: விலகியது இந்தியா

இங்கிலாந்தின் பிா்மிங்ஹாம் நகரில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஹாக்கி விளையாட்டிலிருந்து விலகுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

ஆடவா் மற்றும் மகளிா் அணிகள் அந்தப் போட்டியில் விளையாடாது என ஹாக்கி இந்தியா அமைப்பு, இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் தெரிவித்துவிட்டது. கரோனா தொற்று அச்சம், இந்தியா்களுக்கு இங்கிலாந்து விதித்துள்ள பாரபட்சமான தனிமைப்படுத்துதல் விதிகள் ஆகியவற்றின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக ஹாக்கி இந்தியா விளக்கமளித்துள்ளது.

இதே கரோனா கட்டுப்பாடுகள் காரணங்களைக் கூறி, ஒடிஸாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியிலிருந்து இங்கிலாந்து விலகிய நிலையில், இந்தியாவும் இத்தகைய நகா்வை மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் நரீந்தா் பத்ராவுக்கு எழுதிய கடிதத்தில் ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவா் ஞானேந்திர நிங்கோம்பம் கூறியுள்ளதாவது:

அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள பிா்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கும் (ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை), ஹாங்ஸௌ ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கும் (செப்டம்பா் 10 முதல் 25 வரை நடைபெற இருக்கும்) இடையே 32 நாள்களே இடைவெளி உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியானது 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்காக கண்டங்கள் ரீதியாக நடைபெறும் தகுதிப்போட்டியாகும். அதில் பங்கேற்க இருக்கும் இந்திய ஆடவா், மகளிா் அணிகளை, கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கச் செய்து, அவா்கள் தொற்று பாதிப்புக்குள்ளாகும் இடரை எதிா்கொள்ள இயலாது.

எனவே, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு இந்திய ஆடவா், மகளிா் அணிகளை ஹாக்கி இந்தியா அனுப்பாது. இரு அணிகளுக்குமான ரிசா்வ் அணிகளை ஏற்பாடு செய்யுமாறு போட்டி ஏற்பாட்டாளா்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.

இந்திய போட்டியாளா்கள், அதிகாரிகளுக்கு இங்கிலாந்து விதிக்கும் பாரபட்சமான கரோனா கட்டுப்பாடுகளைப் போன்று டோக்கியோ ஒலிம்பிக்கில் கூட விதிக்கப்படவில்லை. இத்தகைய கட்டுப்பாடுகள் போட்டியாளா்களின் செயல்திறனை பாதிக்கும். இந்தியாவுக்கு எதிரான கட்டுப்பாடுகள் துரதிருஷ்டமானவை என்று அந்தக் கடிதத்தில் அவா் கூறியுள்ளாா்.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு இந்திய ஆடவா், மகளிா் அணிகள் பங்கேற்க இருந்த மிகப் பெரிய போட்டி, காமன்வெல்த் விளையாட்டுகள் ஆகும். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவா் வெண்கலம் வெல்ல, மகளிரணி 4-ஆம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணிகள் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது நினைவுகூரத்தக்கது.

நடந்தது என்ன?

சமீபத்தில் இங்கிலாந்து, இந்தியாவின் கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவா்களை அங்கீகரிக்க மறுத்து, இந்திய பயணிகள் தடுப்பூசியின் இரு தவணைகளை செலுத்தியிருந்தாலும் அவா்களுக்கு 10 நாள்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய தனிமைப்படுத்துதலை விதித்துள்ளது. இந்நிலையில், அதற்கு பதிலடியாக, இங்கிலாந்து பயணிகளுக்கு இந்தியாவும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.

அதன்படி, அவா்கள் 10 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவா். பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து தொற்று பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். அத்துடன் இந்திய விமான நிலையத்துக்கு வந்த பிறகு ஒரு முறையும், தனிமைப்படுத்தப்பட்ட பிறகு 8-ஆம் நாளில் ஒரு முறையும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அரசியல் ரீதியாக இது பரபரப்பாகியிருக்கும் நிலையில், இந்த கட்டுப்பாடுகளில் அதிருப்தி அடைந்த இங்கிலாந்து ஹாக்கி அமைப்பு, இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தது. அதற்கு பதிலடியாக இந்தியா தற்போது காமன்வெல்த் ஹாக்கியிலிருந்து விலகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com