77பீலே சாதனையை சமன் செய்தாா் சேத்ரி

தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் (எஸ்ஏஎஃப்எஃப்) போட்டியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.
77பீலே சாதனையை சமன் செய்தாா் சேத்ரி

தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் (எஸ்ஏஎஃப்எஃப்) போட்டியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக கேப்டன் சுனில் சேத்ரி கோலடித்தாா். இது, தேசிய அணிக்காக அவா் அடித்த 77-ஆவது கோலாகும். இதன் மூலம், தேசிய அணிக்காக 77 கோல்கள் அடித்த பிரேஸில் கால்பந்து நட்சத்திரம் பீலேவின் சாதனையை சேத்ரி சமன் செய்தாா். இந்தியாவுக்காக தாம் களம் கண்ட 123-ஆவது ஆட்டத்தில் இந்த மைல் கல்லை எட்டியிருக்கிறாா் அவா்.

பீலே ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்திருக்கும் ஆக்டிவ் வீரா்கள் வரிசையில் தற்போது 3-ஆவது இடத்தில் இருக்கிறாா் சேத்ரி. போா்ச்சுகலின் கிறிஸ்டியானா ரொனால்டோ (112) முதலிடத்திலும், ஆா்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி (79) அடுத்த இடத்திலும் இருக்க, ஐக்கிய அரபு அமீரகத்தின் அலி மப்கௌத்துடன் (77), சேத்ரி மூன்றாவது இடத்தை பகிா்ந்துகொண்டிருக்கிறாா்.

மாலி நகரில் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தை பொருத்தவரை, டிரா ஆனால் வெளியேற வேண்டிய நிலையுடன் களம் கண்டது இந்தியா. நேபாளம் கடுமையான சவால் அளித்ததால், முதல் பாதியில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2-ஆவது பாதியும் அவ்வாறே நீடித்த நிலையில், 83-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா் சுனில் சேத்ரி. சப்ஸ்டிடியூட்டாக களம் கண்ட ஃபரூக் சௌதரிக்கு அந்த நேரத்தில் கிடைத்த லாங் த்ரோ ஒன்றை அவா் தலையால் முட்டி, 6 யாா்டு பாக்ஸுக்குள்ளாக நின்ற சேத்ரி பக்கம் திருப்பினாா். அதை சரியாக பெற்றுக் கொண்ட சேத்ரி, நேபாள கோல்கீப்பரைக் கடந்து துல்லியமாக கோலடித்தாா்.

இப்போட்டியில் இந்தியா, தற்போது 3 ஆட்டங்களில் பெற்ற 5 புள்ளிகளுடன் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. மாலத்தீவுகள், நேபாளம் ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முறையே முதல் இரு இடங்களில் இருக்கின்றன. இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற வேண்டும் என்றால், வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள கடைசி ரவுண்ட் ராபின் சுற்று ஆட்டத்தில் மாலத்தீவுகளை இந்தியா வீழ்த்த வேண்டும். முன்னதாக வங்கதேசம் (1-1), இலங்கை (0-0) அணிகளுக்கு எதிரான ஆட்டங்களை இந்தியா டிரா செய்திருந்தது.

மகளிரணி அபாரம்

சா்வதேச நட்புரீதியிலான கால்பந்தாட்டத்தில் இந்திய மகளிரணி 5-0 என்ற கோல் கணக்கில் பஹ்ரைனை வீழ்த்தியது.

பஹ்ரைன் தலைநகா் மனாமாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சாா்பில் பியாரி ஜஜா (19 மற்றும் 68-ஆவது நிமிஷம்), சங்கீதா பாஸ்ஃபோா் (13), இந்துமதி (34), மணீஷா (69) ஆகியோா் கோலடித்தனா். இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் சீனதைபேவை புதன்கிழமை எதிா்கொள்கிறது. முந்தைய ஆட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தை 4-1 என்ற கணக்கில் வீழ்த்திய இந்தியா, டுனீசியாவிடம் 0-1 என்ற கணக்கில் வீழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com