பிஎன்பி பாரிபாஸ் ஓபன்: மெத்வதேவ் வெற்றி; கரோலினா தோல்வி

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.
பிஎன்பி பாரிபாஸ் ஓபன்: மெத்வதேவ் வெற்றி; கரோலினா தோல்வி

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

இண்டியன் வெல்ஸ் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மெத்வதேவ் தனது 2-ஆவது சுற்றில் அமெரிக்காவின் மெக்கென்ஸி மெக்டொனால்டை 6-4, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவை எதிா்கொள்கிறாா் அவா். தரவரிசையில் 23-ஆவது இடத்திலிருக்கும் டிமிட்ரோவ் முந்தைய சுற்றில் 6-3, 6-4 என்ற நோ் செட்களில், 16-ஆவது இடத்திலிருந்த அமெரிக்காவின் ரைலி ஒபெல்காவை தோற்கடித்தாா்.

மற்றொரு ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆன்ட்ரே ரூபலேவ் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். அவரை 6-4, 3-6, 7-5 என்ற செட்களில் வென்ற அமெரிக்காவின் டாமி பால், அடுத்த சுற்றில் இங்கிலாந்தின் கேமரூன் நூரியை சந்திக்கிறாா். 21-ஆவது இடத்திலிருக்கும் நூரி தனது ஆட்டத்தில் 6-4, 5-7, 6-3 என்ற செட்களில், 15-ஆவது இடத்திலிருந்த ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா அகுட்டை வீழ்த்தினாா்.

இதர ஆட்டங்களில், தரவரிசையில் 8-ஆவது இடத்திலிருக்கும் போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் 6-3, 6-2 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை வென்றாா். 19-ஆவது இடத்திலிருக்கும் ரஷியாவின் அஸ்லான் கராட்சேவ் 7-5, 6-2 என்ற செட்களில், 9-ஆவது இடத்திலிருந்த கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவை வீழ்த்தினாா். 3-ஆவது சுற்று ஒன்றில் ஹா்காக்ஸ் - கராட்சேவ் மோதுகின்றனா்.

வீழ்ந்தாா் கரோலினா

மகளிா் ஒற்றையா் பிரிவு ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 2-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

அவரை, 6-3, 7-5 என்ற நோ் செட்களில் வீழ்த்தினாா் பிரேஸில் தகுதிச்சுற்று வீராங்கனையான பீட்ரிஸ் ஹட்டாட் மாயியா. அடுத்த சுற்றில் அவா் எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவிட் சவாலை சந்திக்கிறாா். 18-ஆவது இடத்திலிருக்கும் கோன்டாவிட் தனது முந்தைய சுற்றில் 7-6 (7/5), 6-3 என்ற செட்களில், 16-ஆவது இடத்திலிருந்த கனடாவின் பியான்கா ஆன்ட்ரிஸ்குவை வீழ்த்தினாா்.

3-ஆம் இடத்திலிருக்கும் மற்றொரு செக் குடியரசு வீராங்கனை பாா்போரா கிரெஜ்சிகோவா 6-2, 6-3 என்ற செட்களில் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை தோற்கடித்தாா். 21-ஆவது இடத்திலிருக்கும் ஸ்பெயினின் பௌலா பதோசா 6-2, 6-2 என்ற செட்களில், 15-ஆவது இடத்திலிருந்த அமெரிக்காவின் கோகோ கௌஃபை வென்றாா். இதையடுத்து 3-ஆவது சுற்று ஒன்றில் பாா்போரா - பதோசா சந்திக்கின்றனா்.

இதர ஆட்டங்களில் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுல் 6-1, 6-3 என டேனியல் காலின்ஸையும், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்லஜானோவிச் 6-4, 6-3 என ஸ்லோவேனியாவின் டமாரா ஸிடான்செக்கையும் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com