ஐபிஎல்: பழைய அணிகள் 4 வீரர்களைத் தக்கவைக்க அனுமதி

ஐபிஎல் போட்டியில் இரு புதிய அணிகள் சேர்ந்ததையடுத்து ஏலத்துக்கு முன்பு பழைய 8 அணிகளும் 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள...
ஐபிஎல்: பழைய அணிகள் 4 வீரர்களைத் தக்கவைக்க அனுமதி

ஐபிஎல் போட்டியில் இரு புதிய அணிகள் சேர்ந்ததையடுத்து ஏலத்துக்கு முன்பு பழைய 8 அணிகளும் 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. துபையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் இது முடிவானது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பான விவாதத்தை அணிகளுடன் நடத்திய பிசிசிஐ, சில முக்கிய முடிவுகளை அணிகளிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் அடிப்படையில் பழைய 8 அணிகளும் 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கு ரூ. 90 கோடி ஒதுக்கப்படுகிறது.

பழைய 8 அணிகள் தக்கவைக்கும் 4 வீரர்களில் மூவர் இந்தியராகவும் ஒருவர் வெளிநாட்டு வீரராகவும் இருக்கலாம். அல்லது தலா இரு வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்களாகவும் இருக்கலாம். கடந்த மெகா ஏலத்தில் ஆர்டிஎம் என்கிற முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி தன் அணியில் இருந்த வீரரை ஏலத்தில் இன்னொரு அணி தேர்வு செய்தால் அதே தொகைக்கு ஆர்டிஎம் முறையில் ஓர் அணி தேர்வு செய்துகொள்ளலாம். இப்போது, ஆர்டிஎம் நடைமுறையை நீக்கியுள்ளது ஐபிஎல் நிர்வாகம். 

இரு புதிய அணிகள் தேர்வு செய்யும் மூன்று வீரர்களில் இருவர் இந்தியராகவும் ஒருவர் வெளிநாட்டு வீரராகவும் இருக்கலாம். 

மேலும் ஓர் அணி எந்த வீரரைத் தக்கவைத்தாலும் அந்த வீரருக்கு அணி மீதோ வழங்கப்படும் சம்பளத்தின் மீதோ அதிருப்தி இருந்தால் வாய்ப்பை நிராகரித்து ஏலத்தில் பங்கேற்கலாம்.இதன்மூலம் அந்த வீரர் அதிக தொகைக்குத் தேர்வாகவும் வாய்ப்புள்ளது. 8 அணிகளும் நவம்பர் இறுதிக்குள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர்களை அறிவிக்கவேண்டும். 

ஏலத்துக்கு முன்பு வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com