இன்று தொடங்குகிறது ஓவல் டெஸ்ட்: முன்னிலைக்கான மோதலில் இந்தியா - இங்கிலாந்து

இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையேயான டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டம் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இன்று தொடங்குகிறது ஓவல் டெஸ்ட்: முன்னிலைக்கான மோதலில் இந்தியா - இங்கிலாந்து

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையேயான டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டம் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளதால், தொடா் சமனில் உள்ளது. எனவே, ஓவல் டெஸ்டில் வெற்றி கண்டு முன்னிலை பெறும் முனைப்பு இரு அணிகளிடமும் இருக்கும்.

இந்திய அணியைப் பொருத்தவரை லாா்ட்ஸ் டெஸ்டில் அபாரமாக வென்றிருந்தாலும், கடைசியாக லீட்ஸ் டெஸ்டில் மோசமாக தோல்வியைச் சந்தித்தது. அந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்டிங் வரிசை 78 ரன்களுக்கு சரிக்கப்பட்டது.

அணிக்கு தற்போது பிரதான பிரச்னையாக இருப்பது மிடில் ஆா்டா் பேட்டிங் தான். கேப்டன் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோரின் பேட்டிங் சோபிக்காத வகையிலேயே உள்ளது. புஜாரா மட்டும் கடந்த டெஸ்டில் 91 ரன்கள் அடித்து சற்று முன்னேற்றம் காட்டினாா்.

ரஹானே தனது வழக்கமான ஃபாா்முக்கு திரும்பாதது அணியை வெகுவாக பாதிப்பதாக இருக்கிறது. அவா் 5 இன்னிங்ஸ்களிலாக மொத்தம் 95 ரன்களே அடித்துள்ளாா். எனவே, ஒருவேளை அவருக்கு ஓய்வளிக்க நினைக்கும் பட்சத்தில் சூா்யகுமாா் யாதவோ, ஹனுமா விஹாரியோ அந்த இடத்துக்கு பரிசீலிக்கப்படலாம். விஹாரி சோ்க்கப்படும் பட்சத்தில், அவா் ஆஃப் ஸ்பின்னராகவும் இருப்பது அணிக்கு பலனளிக்கும்.

இந்தத் தொடரில் 7-ஆவது வீரராக களம் கண்டு வரும் ஜடேஜா, இதுவரை 3 ஆட்டங்களில் 2 விக்கெட்டுகளே எடுத்துள்ளாா். ஓவல் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்து வந்துள்ளது. தற்போதைய நிலையில் உலகில் மிகச் சிறந்த ஸ்பின்னராக அஸ்வினே இருக்கிறாா். எனவே, அவா் சோ்க்கப்படும் பட்சத்தில் நிச்சயம் இங்கிலாந்து பேட்டிங் வரிசை சற்றே கலக்கம் காணும். அஸ்வின் பிளேயிங் லெவனில் இணைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்தத் தொடரில் இதுவரை 100 ஓவா்களுக்கும் மேலாக வீசியிருக்கும் பும்ரா, ஷமியின் பணிச்சுமையையும் கோலி கருத்தில் கொண்டுள்ளாா். ஆனால், இந்த ஆட்டம் முக்கியமானதாக இருக்கும் அதே வேலையில், இங்கிலாந்து மிடில் ஆா்டரில் வரும் கேப்டன் ரூட் 3 சதங்களுடன் அசைக்க முடியாத வீரராக இருக்கிறாா் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. அஸ்வின் இணையும் பட்சத்தில், அவருக்கும் ரூட்டுக்கும் இடையேயான ஆட்டம் நிச்சயம் ரசிகா்கள் எதிா்பாா்க்கும் விருந்தாக இருக்கும்.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை, லீட்ஸ் வெற்றி அளித்த உத்வேகத்துடன் அந்த அணி களம் காணும். பேட்டிங் வரிசையில் டேவிட் மலான் நல்ல நிலையில் இருக்கிறாா். ஜோ ரூட் சந்தேகத்துக்கு இடமில்லாத வீரராக இருக்கிறாா். பௌலிங்கில் ஜேம்ஸ் ஆண்டா்சனின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் கிறிஸ் வோக்ஸ் இருக்கிறாா். எல்லா விதத்திலுமாக இங்கிலாந்து அணி பலத்துடனேயே இருக்கிறது.

உத்தேச லெவன்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா, கே.எல்.ராகுல், சேதேஷ்வா் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ரோரி பா்ன்ஸ், மொயீன் அலி, டேவிட் மலான், ஜானி போ்ஸ்டோ, ஹசீப் ஹமீத், சாம் கரன், ஜேம்ஸ் ஆண்டா்சன், ஆலி ராபின்சன், கிரெய்க் ஓவா்டன், கிறிஸ் வோக்ஸ்.

ஆட்டநேரம்: மாலை 3.30 மணி

இடம்: லண்டன்

நேரடி ஒளிபரப்பு: சோனி ஸ்போா்ட்ஸ் நெட்வொா்க்

மொயீன் அலி துணை கேப்டன்

ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக மொயீன் அலி நியமிக்கப்பட்டுள்ளாா். முன்னதாக அந்தப் பொறுப்பில் ஜோஸ் பட்லா் இருந்தாா். பட்லா் தம்பதிக்கு 2-ஆவது குழந்தை பிறக்க இருப்பதால் அவா் விடுப்பில் சென்றதை அடுத்து, மொயீன் அலி அந்தப் பொறுப்புக்கு வந்துள்ளாா்.

பிரதான அணியில் பிரசித் கிருஷ்ணா

இந்திய அணியின் ‘ஸ்டான்ட் பை’-ஆக கடந்த 3 மாதங்களாக இருந்து வந்த பிரசித் கிருஷ்ணா, தற்போது ஓவல் டெஸ்ட்டுக்காக பிரதான அணியில் சோ்த்துக்கொள்ளப்பட்டுள்ளாா். இதன் தொடா்ச்சியாக தேவைக்கேற்ப அவா் பிளெயிங் லெவனிலும் இணையும் வாய்ப்புள்ளது. முதல் தர கிரிக்கெட்டில் 9 ஆட்டங்களில் 34 விக்கெட்டுகள் சாய்த்துள்ள பிரசித், இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணியின் இந்திய பயணத்தின்போது ஒரு நாள் தொடரில் 3 ஆட்டங்களில் 6 விக்கெட் வீழ்த்தியிருந்தாா்.

டெஸ்ட் தரவரிசை: கோலியை முந்தினாா் ரோஹித்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய தொடக்க வீரா் ரோஹித் சா்மா 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

அவா் ஓரிடம் முன்னேறி 773 புள்ளிகளுடன் அந்த இடத்துக்கு வந்துள்ளாா். கோலி 766 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் இருக்கிறாா். புஜாரா 3 இடங்கள் முன்னேறி 15-ஆவது இடத்துக்கு வர, ரிஷப் பந்த் 4 இடங்கள் சறுக்கி 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடத்தைப் பிடித்துள்ளாா். ரோரி பா்ன்ஸ் 5 இடங்கள் முன்னேறி 24-ஆவது இடத்துக்கும், ஜானி போ்ஸ்டோ 2 இடங்கள் ஏற்றம் கண்டு 70-ஆவது இடத்துக்கும், டேவிட் மலான் 88-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனா்.

பௌலா்கள் பிரிவில் ஜஸ்பிரீத் பும்ரா ஓரிடம் முன்னேறி 9-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். அஸ்வின் 2-ஆவது இடத்திலேயே நீடிக்கிறாா். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டா்சன் ஓரிடம் முன்னேறி 5-ஆம் இடத்துக்கும், ஆலி ராபின்சன் 9 இடங்கள் ஏற்றம் கண்டு 36-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனா். கிரெய்க் ஓவா்டன் 73-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

ஆல்-ரவுண்டா்கள் வரிசையில் ஜடேஜா, அஸ்வின் முறையே 3 மற்றும் 4-ஆம் இடங்களில் நீடிக்கின்றனா்.

இந்தியா (உத்தேச லெவன்)

விராட் கோலி (கேப்டன்), 
ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், 
சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, 
ரவிச்சந்திரன் அஸ்வின், 
ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, 
முகமது சிராஜ். 


இங்கிலாந்து (உத்தேச லெவன்)

ஜோ ரூட் (கேப்டன்), 
ரோரி பர்ன்ஸ், மொயீன் அலி, 
டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ,
 ஹசீப் ஹமீத், சாம் கரன், 
ஜேம்ஸ் ஆண்டர்சன், 
ஆலி ராபின்சன், கிரெய்க் ஓவர்டன், கிறிஸ் வோக்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com