4ஆவது டெஸ்ட்: 99 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் முன்னிலை பெற்றது. 
4ஆவது டெஸ்ட்: 99 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் முன்னிலை பெற்றது. 

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் சர்மா, ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் இடம்பெற்றுள்ளார்கள். இந்த டெஸ்டிலும் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணியில் பட்லர், சாம் கரணுக்குப் பதிலாக போப், வோக்ஸ் இடம்பெற்றுள்ளார்கள்.  

இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் தடுமாற்றமாக விளையாடி 61.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் 57, கோலி 50 ரன்கள் எடுத்தார்கள்.  முதல்நாள் முடிவில் இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. மலான் 26 ரன்களுடனும் ஓவர்டன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தார்கள். ரூட் 21 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் போல்ட் ஆனார். இன்று, ஓவர்டனைக் கூடுதலாக ரன் எதுவும் எடுக்க விடாமல் வீழ்த்தினார் உமேஷ் யாதவ். பிறகு மலானை 31 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்லிப்பில் அருமையாக கேட்ச் பிடித்தார் ரோஹித் சர்மா. 

நீண்ட நாளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த உமேஷ் யாதவ் உடனடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தினார்.  இதன்பிறகு ஜோடி சேர்ந்த போப்பும் பேர்ஸ்டோவும் விரைவாக ரன்கள் எடுத்தார்கள். நிறைய பவுண்டரிகள் கிடைத்தன. ஒரு ஓவரில் போப் மூன்று பவுண்டரிகள் அடித்தால் அடுத்த ஓவரிலேயே பேர்ஸ்டோவும் மூன்று பவுண்டரிகள் அடித்து அசத்தினார். இதன்பிறகு உணவு இடைவேளை நெருங்கியபோதுதான் நிதானமாக ஆடினார்கள். இருவரும் 77 ரன்கள் கூட்டணி அமைத்து இங்கிலாந்தைச் சரிவிலிருந்து மீட்டெடுத்தார்கள்.

2-ம் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 42 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்திருந்தது. போப் 38, பேர்ஸ்டோ 34 ரன்களுடன் களத்தில் இருந்தனர். தொடர்ந்து விளையாடிய பேர்ஸ்டோ 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மொயின் அலி, போப்புக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். எனினும், மொயின் அலி 35 ரன்களுக்கும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போப் 81 ரன்களுக்கும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதைத்தொடர்ந்து களம் கண்ட வோக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 60 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 84 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி, இந்திய அணியைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com