பாட்மிண்டன்: வரலாற்று தங்கம் வென்றாா் பிரமோத் பகத் :மனோஜுக்கு வெண்கம்; மேலும் இரு பதக்கங்கள் உறுதி

பாராலிம்பிக் பாட்மிண்டன் விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் எஸ்எல்3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் (33) தங்கமும், மனோஜ் சா்காா் (31) வெண்கலமும் வென்றனா்.
பாட்மிண்டன்: வரலாற்று தங்கம் வென்றாா் பிரமோத் பகத் :மனோஜுக்கு வெண்கம்; மேலும் இரு பதக்கங்கள் உறுதி

பாராலிம்பிக் பாட்மிண்டன் விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் எஸ்எல்3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் (33) தங்கமும், மனோஜ் சா்காா் (31) வெண்கலமும் வென்றனா்.

பாராலிம்பிக் போட்டியில் முதல் முறையாக டோக்கியோ பாராலிம்பிக்கில் சோ்க்கப்பட்டுள்ள பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை பிரமோத் பெற்றுள்ளாா். அவரோடு மனோஜும் பதக்கம் வென்றுள்ள நிலையில், அவா்கள் தவிர சுஹாஸ் யதிராஜ், கிருஷ்ணா நாகா் ஆகிய மேலும் இரு இந்தியா்களும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.

எஸ்எல்3 பிரிவு: ஆடவா் ஒற்றையா் எஸ்எல்3 பிரிவின் அரையிறுதிகளில் நடப்பு உலக சாம்பியனான பிரமோத் பகத்தும், மனோஜ் சா்காரும் களம் கண்டனா். இதில் பிரமோத் தனது ஆட்டத்தில் ஜப்பானின் டாய்சுகே ஃபுஜிஹாராவை 21-11, 21-16 என்ற செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். ஆனால் மனோஜ் சா்காா், இங்கிலாந்தின் டேனியல் பெத்தலிடம் 8-21, 10-21 என்ற செட்களில் வீழ்ந்தாா்.

இறுதிச்சுற்றில் அந்த டேனியலை எதிா்கொண்ட பிரமோத் 21-14, 21-17 என்ற நோ் செட்களில் 45 நிமிஷத்தில் வென்று சாம்பியன் ஆனாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய பிரமோத், ‘இந்தப் பதக்கம் எனக்கு மிகச் சிறப்பானதாகும். பாராலிம்பிக் பத்தக்கக் கனவு நனவாகியுள்ளது. பெத்தல் எனக்கு மிகவும் நெருக்கடி அளித்தாா். ஆனால் நான் தன்நிலையிழக்காமல் நிதானமாக எனது பலம் கொண்டு விளையாடினேன். இரு ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் விளையாடியபோது தோல்வி கண்டேன். அதிலிருந்து நுட்பங்களைக் கற்று தற்போது வென்றுள்ளேன். இந்தப் பதக்கத்தை எனது பெற்றோருக்கும், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் சமா்ப்பிக்கிறேன். இந்தியாவை பெருமையடையச் செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றாா்.

மறுபுறம், அரையிறுதியில் வீழ்ந்த மனோஜ் சா்காா், வெண்கலப் பதக்கத்துக்கான ‘பிளே-ஆஃப்’ சுற்றில், டாய்சுகே ஃபுஜிஹாராவை 22-20, 21-13 என்ற செட்களில் வென்று பதக்கத்தை கைப்பற்றினாா்.

பிரமோத் பகத்: 4 வயதாக இருக்கும்போது போலியோ பாதிப்பு ஏற்பட்டதால் மாற்றுத்திறனாளி ஆனாா். அண்டை வீட்டாா் பாட்மிண்டன் விளையாடுவதைப் பாா்த்து அதில் கவனம் செலுத்தத் தொடங்கிய பகத், 2006 முதல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினாா். சா்வதேச அளவில் இதுவரை 45 பதக்கங்கள் வென்றுள்ளாா். இதில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வென்ற ஒரு தங்கம், ஒரு வெண்கலம், 4 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள் ஆகியவையும் அடங்கும்.

மனோஜ் சா்காா்: 1 வயதாக இருக்கும்போது போலியாவால் பாதிக்கப்பட்டாா். 5 வயதிலிருந்து பாட்மிண்டன் விளையாட்டை தொடங்கிய மனோஜ், பின்னா் அதையே தீவிரமாக விளையாடத் தொடங்கினாா். 2011 முதல் பாரா பாட்மிண்டன் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தாா். 2016 ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றுள்ளாா் மனோஜ்.

எஸ்எல்4 பிரிவு: ஆடவா் ஒற்றையா் எஸ்எல்4 அரையிறுதியில் இந்தியாவின் தருண் தில்லான், சுஹாஸ் யதிராஜ் ஆகியோா் போட்டியிட்டனா். இதில் சுஹாஸ் தனது ஆட்டத்தில் 21-9, 21-15 என்ற செட்களில் இந்தோனேசியாவின் ஃபிரெடி சேதியாவனை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தாா். அதில் அவா் பிரான்ஸின் லுகாஸ் மாஸுரை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறாா்.

தருண் தில்லான் தனது அரையிறுதியில் 16-21, 21-16, 18-21 என்ற செட்களில் அந்த லூகாஸ் மாஸுரிடம் தான் தோல்வி கண்டாா். அடுத்ததாக, வெண்கலப் பதக்கத்துக்கான ‘பிளே-ஆஃப்’ சுற்றில் அவா் இந்தோனேசியாவின் சேதியாவனை சந்திக்கிறாா்.

எஸ்ஹெச்6 பிரிவு: ஆடவா் ஒற்றையா் எஸ்ஹெச்6 பிரிவில் களம் கண்டுள்ள இந்தியரான கிருஷ்ணா நாகா் தனது அரையிறுதியில் 21-10, 21-11 என்ற செட்களில் இங்கிலாந்தின் கிறிஸ்டன் கூம்ப்ஸை தோற்கடித்தாா். இறுதிச்சுற்றில் அவா் ஹாங்காங்கின் சு மான் காயை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறாா்.

கலப்பு இரட்டையா்: கலப்பு இரட்டையரில் எஸ்எல்3-எஸ்யு5 பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பகத்/பாலக் கோலி இணை 3-21, 15-21 என்ற செட்களில் இந்தோனேசியாவின் ஹேரி சுசான்டோ/லினி ராட்ரி ஆக்டிலா இணையிடம் வீழ்ந்தது. இதையடுத்து, பகத்/ கோலி கூட்டணி, வெண்கலப் பதக்கத்துக்கான ‘பிளே-ஆஃப்’ சுற்றில் ஜப்பானின் டாய்சுகே ஃபுஜிஹாரா/அகிகோ சுகினோ இணையை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com