பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற பிரமோத் பகத்துக்கு ரூ. 6 கோடி பரிசுத்தொகை
By DIN | Published On : 08th September 2021 06:29 PM | Last Updated : 08th September 2021 06:29 PM | அ+அ அ- |

பாராலிம்பிக் பாட்மிண்டன் விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் எஸ்எல்3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கம் வென்றார்.
பாராலிம்பிக் போட்டியில் முதல் முறையாக டோக்கியோ பாராலிம்பிக்ஸில் சோ்க்கப்பட்டுள்ள பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை பிரமோத் பெற்றார். 33 வயது பகத், ஒடிஸா மாநிலத்தின் புவனேஸ்வரைச் சேர்ந்தவர்.
பிரமோத் பகத் 4 வயதாக இருக்கும்போது போலியோ பாதிப்பு ஏற்பட்டதால் மாற்றுத்திறனாளி ஆனாா். அண்டை வீட்டாா் பாட்மிண்டன் விளையாடுவதைப் பாா்த்து அதில் கவனம் செலுத்தத் தொடங்கிய பகத், 2006 முதல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினாா். சா்வதேச அளவில் இதுவரை 45 பதக்கங்கள் வென்றுள்ளாா். இதில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வென்ற ஒரு தங்கம், ஒரு வெண்கலம், 4 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள் ஆகியவையும் அடங்கும்.
இந்நிலையில் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பிரமோத் பகத்துக்கு ரூ. 6 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். குரூப் ஏ அளவிலான அரசுப் பணிக்கும் அவர் தகுதி பெற்றுள்ளார். பிரமோத் பகத் புவனேஸ்வருக்குத் திரும்பிய பிறகு முதல்வரின் கையால் பரிசுத்தொகை வழங்கப்படும் என ஒடிஸா அரசு அறிவித்துள்ளது.