கடைசிப் பந்தில் வெற்றி: சிபிஎல் பட்டம் வென்ற பிராவோ அணி
By DIN | Published On : 16th September 2021 01:44 PM | Last Updated : 16th September 2021 03:21 PM | அ+அ அ- |

சிபிஎல் 2021 பட்டத்தை டுவைன் பிரவோ தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி வென்றுள்ளது.
சிபிஎல் டி20 போட்டி, ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 15 வரை மேற்கிந்தியத் தீவுகளின் செயிண்ட் கிட்ஸில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் செயிண்ட் லுசியா கிங்ஸும் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸும் மோதின. முதலில் விளையாடிய பிளெட்சர் தலைமையிலான செயிண்ட் லுசியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. கார்ன்வெல், ராஸ்டன் சேஸ் தலா 43 ரன்கள் எடுத்தார்கள்.
இதன்பிறகு விளையாடிய செயிண்ட் கிட்ஸ் அணி, தொடக்கத்திலேயே கெயிலை இழந்தது. அவர் டக் அவுட் ஆனார். ஜோசுவா சில்வா 37 ரன்களும் டிரேக்ஸ் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் எடுத்து செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்தார்கள். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி இரு பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டன. 5-வது பந்தில் பவுண்டரி அடித்த டிரேக்ஸ், கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்து பரபரப்பான முறையில் தனது அணிக்கு வெற்றியை வழங்கினார்.
இதனால் பிராவோ தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சிபிஎல் 2021 கோப்பையை வென்றுள்ளது. கடந்த வருடம் டிரின்பேகோ அணியில் பிராவோ விளையாடியபோதும் அந்த அணி கோப்பையை வென்றது. இதன்பிறகு கடந்த வருடம் கடைசி இடம் பிடித்த செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு மாறி தலைமை தாங்கி கோப்பையை வென்றுள்ளார் பிராவோ.