முதல் பாதியில் எப்படி விளையாடினோம் என்பது முக்கியமில்லை: ராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து வீச்சாளர்

2-ம் பாதியில் எப்படி விளையாடுகிறது என்பதை...
முதல் பாதியில் எப்படி விளையாடினோம் என்பது முக்கியமில்லை: ராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து வீச்சாளர்

ஐபிஎல் போட்டியில் முதல் பாதியில் ஓர் அணி எப்படி விளையாடியது என்பது முக்கியமில்லை என ராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி கூறியுள்ளார்.

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 5-வது இடத்தில் உள்ளது. பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி கூறியதாவது:

ஓர் அணி முதலிடத்தில் உள்ளதோ, 5-வது இடத்தில் உள்ளதோ, போட்டியின் முதல் பாதியில் எப்படி விளையாடியது என்பது முக்கியமில்லை. 2-ம் பாதியில் எப்படி விளையாடுகிறது என்பதைப் பொறுத்துத்தான் எல்லாமும் மாறும். நாங்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ள ஓர் அணி நன்றாக விளையாடும் என்பதில் நம்பிக்கை உள்ளவன். அணி வீரர்களுடன் நன்குப் பழகி அந்த மகிழ்ச்சியையும் நேர்மறை எண்ணங்களையும் கொண்டு வர முயற்சி செய்வேன். 

ஷார்ஜா மைதானத்தின் அளவு சிறியதாக இருப்பது பந்துவீச்சாளர்களுக்குச் சவால் அளிக்கக்கூடியது. அதேசமயம் இதைப் பயன்படுத்தி சிக்ஸர் அடிக்க பேட்ஸ்மேன்கள் முயற்சி செய்வார்கள். இதனால் விக்கெட் எடுக்க வாய்ப்பு கிடைக்கும். ஷார்ஜா போன்ற மைதானங்களில் 35-40 ரன்கள் கொடுத்தும் அணிக்கு வெற்றி தேடித் தரலாம். மற்ற மைதானங்களில் 3 அல்லது 4 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். எனவே விக்கெட் எடுப்பது மட்டுமே முக்கியமில்லை என்றார். 

உலகின் நெ. 1 டி20 பந்துவீச்சாளரான ஷம்சியை இந்த வருட ஐபிஎல் போட்டிக்குத் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 31 வயது ஷம்சி - 2 டெஸ்டுகள், 27 ஒருநாள், 39 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-2 என வென்று அசத்தியது தென் ஆப்பிரிக்க அணி. டி20 தொடர் முழுக்கச் சிறப்பாகப் பந்துவீசிய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி, தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஷம்சியை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 2016 முதல் 2018 வரை ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஷம்சி, இதுவரை 4 ஐபிஎல் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் கெய்ல், லூயிஸ், பொலார்ட், ரஸ்ஸல், பூரன், ஹெட்மையர் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் சிறப்பாகப் பந்துவீசி தனது அணிக்கு வெற்றி தேடித்தந்தார் ஷம்சி. தொடர் முழுக்கவே குறைந்த அளவில் ரன்கள் கொடுத்து மே.இ. தீவுகள் அணியைக் கட்டுப்படுத்தினார். முதல் டி20 ஆட்டத்தில் மட்டுமே 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்தார். அடுத்த 4 டி20 ஆட்டங்களிலும் ஒரு ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் அவர் கொடுக்கவில்லை. டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணியின் மிகப்பெரிய பலமாக, எதிரணிகளை அச்சுறுத்தும் பந்துவீச்சாளராக ஷம்சி இருக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னோட்டத்தை ஐபிஎல் போட்டியில் காண முடியுமா?

ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் 7 ஆட்டங்களில் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது ராஜஸ்தான் அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com