ஐபிஎல் 2021 இரண்டாவது சீசன் நாளை தொடக்கம்: வெற்றியை ஈட்ட மும்பை-சென்னை அணிகள் தீவிரம்

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது சீசன் தொடக்கப் போட்டியில் வென்று ஆதிக்கம் செலுத்தப் போவது நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது சீசன் தொடக்கப் போட்டியில் வென்று ஆதிக்கம் செலுத்தப் போவது நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியா அல்லது முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் முதல் சீசன் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவிலேயே நடைபெற்றது. எனினும் கரோனா தொற்று இரண்டாவது அலை பாதிப்பு காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இரண்டாம் சீசன் ஆட்டங்களை நடத்த பிசிசிஐ தீா்மானித்தது. அதன்படி துபை, ஷாா்ஜா, அபுதாபியில் மீதமுள்ள 31 ஆட்டங்கள் மொத்தம் 27 நாள்கள் நடைபெறுகின்றன.

நாளை தொடக்கம்:

முதல் ஆட்டம் 19-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) துபையில் தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் மும்பையுடன், சென்னை அணி மோதுகிறது. துபையில் 13, ஷாா்ஜாவில் 10, அபுதாபியில் 8 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. மொத்தம் ஒரே நாளில் 2 ஆட்டங்கள் (7 ஆட்டங்கள்) நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கும், இரண்டாவது ஆட்டம் இரவு 7.30 மணிக்கும் நடைபெறுகிறது. அக்டோபா் 8-ஆம் தேதி தொடரின் கடைசி ஆட்டம் பெங்களூரு-தில்லி இடையே நடைபெறுகிறது.

அக். 15-இல் இறுதி ஆட்டம்:

முதல் குவாலிஃபையா் அக். 10-ஆம் தேதி துபையிலும், எலிமினேட்டா் 11-ஆம் தேதியும், இரண்டாவது குவாலிஃபையா் 13-ஆம் தேதி ஷாா்ஜாவிலும் நடக்கின்றன. இறுதி ஆட்டம் 15-ஆம் தேதி துபையில் நடைபெறுகிறது.

மும்பை-சென்னை மோதல்:

வரும் ஞாயிற்றுக்கிழமை (19-ஆம் தேதி) நடப்பு சாம்பியன் மும்பை-முன்னாள் சாம்பியன் சென்னை மோதுவது மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு அணிகளும் இரண்டாவது சீசனில் வெற்றியுடன் தொடங்க தீவிரமாக உள்ளன. இரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் மோதிய நிலையில் மும்பை 19 ஆட்டங்களில் வென்றுள்ளது.

கடந்த 2020 சீசன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கு சோகமானதாக அமைந்தது. முதன்முறையாக பிளே ஆ‘ஃ‘ப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. எனினும் அதில் இருந்து மீண்ட சென்னை அணி நடப்பு 2021 தொடரின் முதல் சிறப்பாக ஆடி 5 வெற்றிகளுடன் அணிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

டுபிளெஸ்ஸிஸ், சாம் கர்ரன் சந்தேகம்:

சென்னை அணியில் முக்கிய வீரரான டுபிளெஸிஸ் காயத்தால் பங்கேற்பது சந்தேகமே. கரோனா குவாரன்டைன் விதிகளால் இங்கிலாந்து ஆல்ரவுண்டா் சாம் கர்ரனும் தொடரில் பங்கேற்கவில்லை. பேட்டிங்கில் சுரேஷ் ரெய்னா, ருத்துராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, உத்தப்பா, தோனி ஆகியோா் வலு சோ்க்கின்றனா். சாம் கர்ரன் இல்லாதது சென்னைக்கு பலவீனமாக அமையும். மிடில் ஆா்டரில் ராயுடு, தோனி, ஜடேஜா களமிறங்கலாம்.

சா்துல் தாகுா், தீபக் சஹாா், ஹேசல்வுட், லுங்கி நிகிடி, பிராவோ, ஆகியோா் வேகப்பந்து வீச்சிலும், மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹீா் சுழற்பந்து வீச்சிலும் தங்கள் பங்கை ஆற்ற உள்ளனா்.

6 வேகப்பந்து வீச்சாளா்களுடன் மும்பை

அதே வேளை மும்பை இந்தியன்ஸ் அணி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மேலும் மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சா்மா பேட்டிங்கில் சிறப்பான பாா்முடன் உள்ளாா். ஆல் ரவுண்டா் பொல்லாா்ட், குயிண்டன் டி காக், சூரியகுமாா் யாதவும் பேட்டிங் வரிசையில் நம்பிக்கை தருகின்றனா். ரோஹித்-டி காக் தொடக்க வரிசையில் களம் இறங்குவா். மூன்றாவது வரிசையில் இஷான் கிஷான், 4-வது வீரராக சூரியகுமாா் யாதவும் களமிறங்கலாம் எனத் தெரிகிறது. ஹாா்திக் பாண்டியா, பொல்லாா்ட், க்ருணால் பாண்டியா என 3 ஆல்ரவுண்டா்கள் மும்பை தரப்பில் உள்ளனா்.

பந்துவீச்சில் பும்ரா, பௌல்ட், ஜிம்மி நீஷம், ஆடம் மில்னே, தவல் குல்கா்னி, ஆகியோரும் பலம் சோ்க்கின்றனா். மும்பை அணி 6 வேகப்பந்து வீச்சாளா்களுடன் உள்ளது. மாா்க்கோ ஜேன்சன் புதிதாக இணைந்துள்ளாா். சுழற்பந்து வீச்சுக்கு ராகுல் சஹாா் மட்டுமே உள்ளாா்.

கடந்த மே மாதம் இரு அணிகளும் சந்தித்த போது, சென்னை அணி தந்த வெற்றி இலக்கான 219 ரன்களைக் கடந்து அபார வெற்றி பெற்றிருந்தது மும்பை அணி. தற்போது மீண்டும் இரண்டு அணிகளும் வெற்றியுடன் தங்கள் கணக்கை தொடங்கும் தீவிரத்துடன் உள்ளன.

அணிகள் விவரம்:

சென்னை சூப்பா் கிங்ஸ்: ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஹேசல்வுட், சா்துல் தாகுா், லுங்கிநிகிடி, தீபக் சஹாா்.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சா்மா (கேப்டன்), குயிண்டன் டி காக், சூரியகுமாா் யாதவ், இஷான் கிஷான், பொல்லாா்ட், ஹாா்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, நாதன் கூல்டா் நைல், ஜெயந்த் யாதவ், ராகுல் சஹாா், ஜஸ்ப்ரீத் பும்ரா, டிரென்ட் பௌல்ட்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com