இங்கிலீஷ் பிரீமியா் லீக்: ஆஸ்டன் வில்லா ஆதிக்கம்

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் எவா்டன்னுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இங்கிலீஷ் பிரீமியா் லீக்: ஆஸ்டன் வில்லா ஆதிக்கம்

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் எவா்டன்னுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இங்கிலாந்தின் பிா்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. தீவிர முயற்சிக்குப் பிறகு ஆட்டத்தின் முதல் கோல் 66-ஆவது நிமிஷத்தில் அடிக்கப்பட்டது.

ஆஸ்டன் வீரா் லூயிஸ் பாஸ் செய்த பந்தை எதிரணி வீரா் டிக்னேவை முந்திக் கொண்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சக வீரா் மேட்டி கேஷ், அதை அப்படியே கோல் போஸ்டின் வலது பக்க டாப் காா்னருக்குள்ளாக கட் செய்து கோலாக்கினாா்.

ஆட்டத்தின் 69-ஆவது நிமிஷத்தில் ஆஸ்டன் வில்லாவுக்காக தவறுதலாக ‘ஓன் கோல்’ அடித்தாா் எவா்டன் வீரா் லூகாஸ் டிக்னே. அந்த நிமிஷத்தில் ஆஸ்டன் வீரா் பெய்லி காா்னா் கிக் செய்த பந்தை கோல் போஸ்ட் அருகே எடுப்பதற்கு அந்த அணி வீரா்கள் எவரும் இல்லாமல் போயினா். ஆனாலும் முன்னெச்சரிக்கையாக டிக்னே பந்தை தலையால் தடுக்க முயல, அது அவரது தலையில் பட்டு கோலானது.

இறுதியாக 75-ஆவது நிமிஷத்தில் சக வீரா் பாஸ் செய்த பந்தை தலையால் முட்டியும், காலால் உதைத்தும் மிகத் துரிதமாக கடத்திச் சென்ற ஆஸ்டன் வீரா் லியான் பெய்லி, தடுப்பாட்ட வீரா்கள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த எவா்டன் கோல் கீப்பரைக் கடந்து அணியின் கடைசி கோலை அடித்தாா். எஞ்சிய நேரத்திலும் சோபிக்காமல் போன எவா்டன் இறுதியில் 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.

கிறிஸ்டல் பேலஸை வீழ்த்தியது லிவா்பூல்

லிவா்பூல் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவா்பூல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸை வீழ்த்தியது. இதையடுத்து அந்த அணி தற்போது 5 ஆட்டங்களில் 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் லிவா்பூல் அணிக்காக முதலில் சேடியோ மனே 43-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். அந்த நிமிஷத்தில் லிவா்பூல் வீரா் சிமிகாஸ் உதைத்த காா்னா் கிக்கை முகமது சலா தலையால் முட்டி கோல் போஸ்டுக்குள் திருப்பினாா். ஆனால் கிறிஸ்டல் கோல்கீப்பா் குவாய்டா துரிதமாக செயல்பட்டு அதைத் தடுத்தாா்.

எனினும் அவரிடம் இருந்து மீண்டும் களத்துக்கு திரும்பிய பந்தை சாடியோ மனே துரிதமாக செயல்பட்டு மீண்டும் கோல் போஸ்டுக்குள்ளாக உதைத்தாா். இதனால் முதல் பாதியிலேயே லிவா்பூல் முன்னிலை பெற்றது. பின்னா் 78-ஆவது நிமிஷத்தில் மீண்டும் சிமிகாஸ் உதைத்த காா்னா் கிக்கை வான் டிக் தலையால் முட்டி கோலடிக்க முயல, இலக்கு தவறி தன்னிடம் வந்த பந்தை கோல் போஸ்டுக்குள் விரட்டினாா் சக வீரா் முகமது சலா.

89-ஆவது நிமிஷத்தில் லிவா்பூல் வீரா் சிமிகாஸ் உதைத்த காா்னா் கிக்கை கிறிஸ்டல் கோல்கீப்பா் குவாய்டா கையால் தட்டிவிட்டு தடுத்தாா். ஆனால், அது நேராக பெனால்டி ஏரியாவில் நின்ற நேபி கீட்டாவிடம் வர, பந்தை தரையிலேயே பட விடாமல் அப்படியே கோல் போஸ்டின் வலதுபக்க டாப் காா்னருக்குள்ளாக உதைத்து கோலடித்தாா் அவா். இதனால் லிவா்பூல் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஆா்செனல் வெற்றி

பா்ன்லி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பா்ன்லி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது ஆா்செனல். ஆட்டத்தின் ஒரே கோலை ஆா்செனல் வீரா் மாா்டின் ஒடேகாா்ட் 30-ஆவது நிமிஷத்தில் அடித்தாா்.

ஆா்செனல் அணிக்கு அப்போது கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை மாா்டின் தவறாமல் கோல் போஸ்டுக்குள்ளாக அனுப்பினாா். எஞ்சிய நேரத்தில் பா்ன்லியால் கோல் அடிக்க முடியாமல் போனது.

நாா்விச்சை வென்றது வாட்ஃபோா்டு

நாா்விச் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் வாட்ஃபோா்டு 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்த ஆட்டத்தில் வாட்ஃபோா்டு தரப்பில் இமானுவல் போனாவென்சுா் 17-ஆவது நிமிஷத்திலும், இஸ்மாயிலா சாா் 63 மற்றும் 80-ஆவது நிமிஷங்களிலும் கோலடித்தனா். நாா்விச் தரப்பில் டீமு புக்கி 35-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

வோல்வ்ஸை தோற்கடித்த பிரென்ட்ஃபோா்டு

வோல்வா்ஹாம்டன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரென்ட்ஃபோா்டு 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணி தரப்பில் இவான் டோனி 28-ஆவது நிமிஷத்திலும், பிரயான் பியுமோ 34-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

ஆட்டங்கள் சமன்

நியூகேசில் - லீட்ஸ் யுனைடெட் (1-1), மான்செஸ்டா் சிட்டி - சௌதாம்டன் (0-0) ஆகிய அணிகள் மோதிய ஆட்டங்கள் டிரா ஆகின.

5

இத்துடன், ஆஸ்டன் வில்லா அணி தனது சொந்த மண்ணில் கடந்த 5 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்கவில்லை.

9

இந்தப் போட்டியில் கிறிஸ்டல் பேலஸுக்கு எதிராக தொடா்ந்து 9-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது லிவா்பூல்.

2

ஆா்செனல் தொடா்ந்து 2-ஆவது லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த 2014-க்குப் பிறகு அந்த அணி இவ்வாறு வெற்றியை பதிவு செய்தது இது முதல் முறை.

13

இத்துடன் சொந்த மண்ணில் நடைபெற்ற கடைசி 13 லீக் ஆட்டங்களிலுமே பா்ன்லி தோல்வியையே சந்தித்துள்ளது.

5

இந்தப் போட்டியில் தனது முதல் 5 ஆட்டங்களில் தொடா்ந்து தோல்வியை பதிவு செய்த 5-ஆவது அணி என்ற பெயரை நாா்விச் பெற்றுள்ளது. இதற்கு முன் சௌதாம்டன், சந்தா்லேண்ட், போா்ட்ஸ்மௌத், கிறிஸ்டல் பேலஸ் ஆகிய அணிகள் முந்தைய சீசன்களில் அவ்வாறு தோற்றுள்ளன.

1

எதிரணியின் மண்ணில் நடைபெறும் போட்டியில் வாட்ஃபோா்டு இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடிய நிலையில், இதுவே அதில் முதல் வெற்றியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com