கடைசி 17 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத்: கேகேஆர் அணிக்கு 157 ரன்கள் இலக்கு

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது குஜராத் அணி.
பாண்டியா, மில்லர்
பாண்டியா, மில்லர்


கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது குஜராத் அணி.

கொல்கத்தா - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. குஜராத் அணி இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களில் 3-ல் மட்டும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது. 

டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக அதாவது 34 ஆட்டங்களுக்குப் பிறகு ஒரு கேப்டன் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். பகல் ஆட்டம் என்பதால் பனிப்பொழிவு பிரச்னை இருக்காது என்கிற காரணத்தால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

குஜராத் அணியிலிருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணியில் டிம் செளதி, சாம் பில்லிங்ஸ், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். ஆரோன் ஃபிஞ்ச், பேட் கம்மின்ஸ், ஷெல்டன் ஜாக்ஸன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். 

ஷுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழக்க 3-ம் நிலை வீரராக பவர்பிளேயில் களமிறங்கி ஆச்சர்யப்படுத்தினார் கேப்டன் பாண்டியா. முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது குஜராத். 10 ஓவர்கள் வரைக்கும் பாண்டியாவும் சஹாவும் நன்கு விளையாடி ஸ்கோரை 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் என உயர்த்தினார்கள். பிறகு சஹா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். 

16 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது குஜராத். இதனால் கடைசி 4 ஓவர்களில் அதிரடியாக விளையாடினால் 180-190 ரன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பாண்டியாவுடன் 50 ரன்கள் கூட்டணி அமைத்த மில்லர், பிறகு 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். செளதி வீசிய 18-வது ஓவரில் பாண்டியா 67 ரன்களுக்கும் ரஷித் கான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் நெருக்கடியை எதிர்கொண்டது குஜராத் அணி. கடைசி ஓவரை வீசிய ரஸ்ஸல் 5 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கடைசி 17 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்ததால் குஜராத் அணியால் எதிர்பார்த்தபடி அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனது. 

குஜராத் அணி 20 ஓவர்களில்  9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. ரஸ்ஸல் 4, செளதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com