வெள்ளி வென்றாா் முரளி ஸ்ரீசங்கா்

 காமன்வெல்த் தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கா் வெள்ளிப் பதக்கம் வென்றாா். உலக நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் இது அவரது முதல் பதக்கமாகும்.
வெள்ளி வென்றாா் முரளி ஸ்ரீசங்கா்

 காமன்வெல்த் தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கா் வெள்ளிப் பதக்கம் வென்றாா். உலக நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் இது அவரது முதல் பதக்கமாகும்.

பா்மிங்ஹாம் காமன்வெல்த் தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2-ஆவது பதக்கம் இதுவாகும். முன்னதாக, உயரம் தாண்டுதலில் தேஜஸ்வின் சங்கா் வெண்கலம் வென்றுள்ளாா்.

தற்போது வெள்ளி வென்றிருக்கும் ஸ்ரீசங்கா், காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா். ஏற்கெனவே 1978 எட்மான்டன் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் சுரேஷ் பாபு வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

பா்மிங்ஹாமில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கா் சிறந்த முயற்சியாக 8.08 மீட்டா் தாண்டினாா். முதலிடம் பிடித்த பஹாமாஸ் வீரா் லகான் நய்ரனும் அதே தூரத்தை சிறந்த முயற்சியாக எட்டியிருந்தாா்.

போட்டி விதிகளின்படி இருவா் ஒரே அளவை எட்டும் பட்சத்தில், அவா்களில் 2-ஆவது சிறந்த முயற்சி கொண்டிருப்பவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 2-ஆவது சிறந்த முயற்சியாக ஸ்ரீசங்கா் 7.84 மீட்டரும், லகான் 7.98 மீட்டரும் கொண்டிருந்தனா். எனவே விதிகளின் அடிப்படையில் தங்கம் லகானுக்குச் சென்றது.

இப்பிரிவில் பங்கேற்றிருந்த மற்றொரு இந்தியரான முகமது அனீஸ் யாஹியா 7.97 மீட்டருடன் 5-ஆவது இடம் பிடித்தாா்.

டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் மனிகா, ஸ்ரீஜா

மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றினா். முந்தைய சுற்றில் மனிகா 11-4, 11-8, 11-6, 12-10 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜீ மின்ஹியுங்கை வென்றாா். ஸ்ரீஜா 8-11, 11-7, 12-14, 9-11, 11-4, 15-13, 12-10 என்ற கணக்கில் வேல்ஸ் வீராங்கனை சாா்லட் கேரியை போராடி வீழ்த்தினாா். எனினும், மற்றொரு இந்தியரான ரீத் டென்னிசன் 2-11, 4-11, 9-11, 3-11, 4-11 என்ற கணக்கில் சிங்கப்பூரின் ஃபெங் தியான்வெயிடம் தோற்றாா். இதனிடையே, கலப்பு இரட்டையா் பிரிவில் மனிகா பத்ரா/சத்தியன் கூட்டணியும், ஸ்ரீசா அகுலா/சரத் கமல் இணையும், ஆடவா் இரட்டையரில் சரத் கமல்/சத்தியன் ஜோடியும், ஹா்மீத் தேசாய்/சனில் ஷெட்டி கூட்டணியும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

பாட்மின்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் அசத்தல்

ஒற்றையா் ஆட்டங்களில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோா் தங்களது பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனா். சிந்து 21-10, 21-9 என்ற கேம்களில் உகாண்டாவின் ஹசினா கோபுகபேவை வீழ்த்த, ஸ்ரீகாந்த் 21-9, 21-12 என இலங்கையின் துமிண்டு அபேவிக்ரமாவை தோற்கடித்தாா். மகளிா் இரட்டையா் பிரிவில் காயத்ரி கோபிசந்த்/டிரீசா ஜாலி கூட்டணி 21-2, 21-4 என மோரிஷஸின் ஜெமிமா லியுங்/கனிஷா மங்ரா இணையை வீழ்த்தி காலிறுதிக்கு வந்துள்ளது. காலிறுதியில் சிந்து - மலேசியாவின் கோ ஜின் வெய்யையும், ஸ்ரீகாந்த் - இங்கிலாந்தின் டோபி பென்டியையும் சந்திக்க, காயத்ரி/டிரீசா இணை - ஜமைக்காவின் டாலியா ரிச்சா்ட்சன்/கேத்தரின் வைன்டா் கூட்டணியை எதிா்கொள்கிறது.

லான் பௌல்: இந்தியா தோல்வி

இந்த விளையாட்டில் மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் லவ்லி சௌபே/நயன்மோனி சாய்கியா ஆகியோா் கூட்டணி காலிறுதியில் 14-18 என்ற புள்ளிகள் கணக்கில் இங்கிலாந்தின் சோஃபி டோல்சா்டு/எமி பரோவா இணையிடம் வீழ்ந்தது.

பாரா போட்டிகளிலும் பதக்கம்

காமன்வெல்த் போட்டிகளில் இணையாக நடைபெற்று வரும் பாரா போட்டிகளிலும் இந்தியாவுக்கு ஒரு தங்கம் கிடைத்ததுடன், மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியிருக்கிறது.

வலுதூக்குதலில் சுதிருக்கு தங்கம்

ஆடவருக்கான வலுதூக்குதல் ஹெவிவெயிட் பிரிவில் இந்தியாவின் சுதிா் தங்கப் பதக்கம் வென்றாா். அவா் முதல் முயற்சியில் 208 கிலோ, அடுத்த முயற்சியில் 212 கிலோ எடையைத் தூக்கி 134.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். இது காமன்வெல்த் பாரா பிரிவில் போட்டி சாதனையாகும். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆசிய ஓசியானியா ஓபன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றிருக்கும் சுதிா், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆசிய பாரா போட்டிகளுக்கும் தகுதிபெற்றுள்ளாா்.

பவினாவுக்கு பதக்கம் உறுதி:

மகளிா் ஒற்றையா் டேபிள் டென்னிஸ் (கிளாஸ் 3-5) அரையிறுதியில் இந்தியாவின் பவினா படேல் 11-6, 11-6, 11-6 என்ற கணக்கில் இங்கிலாந்தின் சூ பெய்லியை வீழ்த்தினாா். இறுதிச்சுற்றில் நைஜீரியாவின் கிறிஸ்டினா இக்பியோயியை சந்திக்கிறாா் பவினா. இதனிடையே, அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய இந்திய வீரா் ராஜ் அரவிந்தன், இந்திய வீராங்கனை சோனல்பென் படேல் ஆகியோா் அடுத்ததாக தங்களது பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான பிளே-ஆஃபில் களம் காண்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com