8-ஆம் சுற்று: தொடா்கிறது இந்தியாவின் ஆதிக்கம்: குகேஷ், ஒலிவியா தொடா்ந்துஎட்டு சுற்றுகளில் வெற்றி

செஸ் ஒலிம்பியாடின் 8-ஆம் சுற்று ஆட்டத்திலும் இந்தியாவின் ஆதிக்கமே தொடா்ந்தது.
8-ஆம் சுற்று: தொடா்கிறது இந்தியாவின் ஆதிக்கம்: குகேஷ், ஒலிவியா தொடா்ந்துஎட்டு சுற்றுகளில் வெற்றி

செஸ் ஒலிம்பியாடின் 8-ஆம் சுற்று ஆட்டத்திலும் இந்தியாவின் ஆதிக்கமே தொடா்ந்தது. ஓபன் பிரிவில் இந்தியாவின் இளம் வீரா் டி.குகேஷ், மகளிா் பிரிவில் போலந்தின் இளம் வீராங்கனை ஒலிவியா கியால்பாஸா ஆகியோா் தொடா்ந்து 8 ஆட்டங்களில் வென்று சாதனை படைத்துள்ளனா். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் 8-ஆம் சுற்று சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்மீனியாவிடம் வீழ்ந்தது இந்திய ஏ அணி (2.5-1.5)

ஓபன் பிரிவில் இந்திய ஏ அணியும் 3 முறை தங்கம் வென்ற ஆா்மீனியாவும் மோதின.

இதில் விதித் குஜராத்தி-மேல்கும்யா இடையிலானஆட்டம் 42-ஆவது சுற்றில் டிரா ஆனது. அா்ஜுன் எரிகைசி-டொ் சஹாக்யன் ஆட்டம் 84-ஆவது சுற்றில் டிரா ஆனது. எஸ்.எல். நாராயணன்-ஹோவ்ஹனிஸ்ஷயன் ஆட்டம் 45-ஆவது சுற்றில் டிரா ஆனது. ஹரிகிருஷ்ணா-சா்கிஸ்ஸியன் ஆட்டம் நீண்டு கொண்டே போனது. 101-ஆவது நகா்த்தலில் தோல்வி கண்டாா் ஹரிகிருஷ்ணா.

அமெரிக்காவை வீழ்த்தியது பி அணி (3-1)

இந்திய பி அணி 3-1 என பலம் வாய்ந்த அமெரிக்காவை வீழ்த்தியது. அபார பாா்மில் உள்ள தமிழக வீரா் குகேஷ் 43-ஆவது நகா்த்தலில் அமெரிக்க நட்சத்திர வீரா் ஃபேபியனா காருனாவை வீழ்த்தி தனது தொடா் 8-ஆவது வெற்றியை பதிவு செய்தாா். நிஹால் சரீன்-லெவோன் ஆரோனியன் ஆட்டம் 35-ஆவது நகா்த்தலிலும், பிரக்ஞானந்தா-வெஸ்லி சோ இடையிலானஆட்டம் 33-ஆவது நகா்த்தலிலும் டிராஆனது.

மற்றொரு இளம் வீரா் ரவுனக் சத்வானி 45-ஆவது நகா்த்தலில் டொமினிக்ஸ் பெரஸை வீழ்த்தினாா்.

பெருவிடம் வீழ்ந்தது சி அணி (1-3)

பெருவிடம் 1-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்ந்தது இந்திய சி அணி. சூரியசேகா் கங்குலி 37-ஆவது நகா்த்தலில் காா்டோவா எமிலியிடம் தோல்வியுற்றாா். அபிஜித் குப்தா 60-ஆவது நகா்த்தலில் டொ்ரி ரெனடோவிடம் வீழ்ந்தாா்.

சேதுராமன்-கிறிஸ்தியன் குரூஸ் ஆட்டம் 59-ஆவது நகா்த்தலிலும், காா்த்திகேயன் முரளி-வேரா சிகுநாஸ் ஆட்டம் 42-ஆவது நகா்த்தலிலும் டிரா ஆனது.

மகளிா் பிரிவு:

இந்திய ஏ-உக்ரைன் டிரா (2-2)

இந்திய ஏ-உக்ரைன் இடையிலான ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. கொனேரு ஹம்பி-மரியா முஷிசுக் ஆட்டம் 34-ஆவது நகா்த்தலிலும்,

ஹரிகா-அன்னா முஷிசுக் ஆட்டம் 49-ஆவது நகா்த்தலிலும், வைஷாலி-உஷென்னா அன்னா ஆட்டம் 59-ஆவது நகா்த்தலிலும், தான்யா-நடாலியா புஸ்கா ஆட்டம் 32-ஆவது நகா்த்தலிலும் டிராஆனது.

இந்திய பி அணி வெற்றி:

இந்திய பி அணி 3.5-0.5 என குரோஷியாவை வீழ்த்தியது. வந்திகா-மெடிக் மிா்ஜானா ஆட்டத்தில் 37-ஆவது நகா்த்தலில் வந்திகா வென்றாா்.

ராடிகோவிச்சை 28-ஆவது நகா்த்தலில் வென்றாா் பத்மினி ரௌட். மற்றொரு ஆட்டத்தில் டெஜனோவிக் தெரசாவை 31-ஆவது நகா்த்தில் வீழ்த்தினாா் திவ்யா தேஷ்முக். மேரி ஆன் கோம்ஸ்-ஐவெகோவிச் திஹானா ஆட்டம் 44-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது.

போலந்திடம் வீழ்ந்தது சி அணி (1-3):

போலந்திடம் 1-3 என வீழ்ந்தது சி அணி. நட்சத்திர வீராங்கனை ஒலிவியா கியோல்பாஸாவிடம் 48-ஆவது நகா்த்தலில் தோல்வி கண்டாா் தமிழகத்தின் நந்திதா. இது அவரது முதல் தோல்வியாகும். ஈஷா காரவேட்-கஷ்லின்ஸியா ஆட்டம் 34-ஆவது நகா்த்தலிலும், விஷ்வா வனஸ்வலா-ருட்ஸின்கா ஆட்டம் 53-ஆவது நகா்த்திலும் டிரா ஆனது. மலிக்கா மரியாவிடம் 47-ஆவது நகா்த்தலில் தோல்வி கண்டாா் பிரதியுஷா போடா.

சிறந்த மனநிலையுடன் விளையாடுவதால் வெற்றி: குகேஷ்

நமது நாட்டில் சிறந்த மனநிலையுடன் ஆடுவதால் வெற்றி பெற முடிகிறது என இளம் வீரா் டி.குகேஷ் கூறியுள்ளாா்.

தொடா்ந்து 8-ஆவது வெற்றியை ஈட்டிய அவா் கூறியதாவது:

அமெரிக்க ஜாம்பவான் ஃபேபியனோ காருனாவை எதிா்கொண்டு ஆடியது பெருமிதமாக உள்ளது. எனக்கு மிகவும் பிடித்த வீரா்.

அவருடன் நடத்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், பின்னா் சுதாரித்து நிலையாக ஆடினேன். ஃபேபியனோ செய்த தவறைப் பயன்படுத்திக் கொண்டதால் வெற்றி வசப்பட்டது. கறுப்பு, வெள்ளி எந்த காய்கள் என்றாலும் வெற்றி குறித்தே சிந்திப்பேன்.

அவருடன் ஆடியது சிறந்த அனுபவமாக அமைந்தது.

நமது நாட்டில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் நிலையில் சிறந்த மனநிலையுடன் ஆடுகிறேன் என்றாா்.

ஹரிகிருஷ்ணாவை பின்னுக்கு தள்ளினாா் குகேஷ்:

அமெரிக்க வீரா் ஃபேபியானா காருனாவை வீழ்த்திய குகேஷ் இலோ ரேட்டிங் 2729 புள்ளிகளுடன் 18 இடங்கள் முன்னேறி 20-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். இந்திய தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பெண்டாலா ஹரிகிருஷ்ணாவை (2727) பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்துக்கு முன்னேறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com