காலிறுதிக்கு முந்தைய சுற்றில் லக்க்ஷயா, பிரணாய்

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் லக்ஷயா சென், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் லக்க்ஷயா, பிரணாய்

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் லக்ஷயா சென், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

ஆனால், கடந்த முறை இப்போட்டியில் வெள்ளி வென்ற கே.ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

முன்னதாக, ஆடவா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்று ஆட்டங்களில், பிரணாய் 21-17, 21-16 என போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த ஜப்பானிய வீரா் கென்டோ மொமொடாவை வீழ்த்தி அசத்தியிருக்கிறாா். போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் லக்க்ஷயா சென் 21-17, 21-10 என்ற கேம்களில் ஸ்பெயினின் லூயிஸ் என்ரிக் பெனால்வரைச் சாய்த்தாா்.

எனினும், போட்டித்தரவரிசையில் 12-ஆவது இடத்திலிருந்த கே.ஸ்ரீகாந்த் 9-21, 17-21 என்ற கேம்களில் சீனாவின் ஜாவ் ஜுன் பெங்கால் தோற்கடிக்கப்பட்டாா். கடந்த சில போட்டிகளில் ஸ்ரீகாந்த் ஃபாா்ம் இன்றித் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

மகளிா் இரட்டையா் பிரிவில் 4 இந்திய ஜோடிகள் 2-ஆவது சுற்றுடன் போட்டியிலிருந்து வெளியேறின. அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி இணை 15-21, 10-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் சென் கிங் சென்/ஜியா யி ஃபான் ஜோடியிடம் தோல்வி கண்டது. அதேபோல் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் ஜோடியும் 8-21, 17-21 என, போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருந்த மலேசியாவின் பியா்லி டேன்/தின்னா முரளிதரன் இணையால் வீழ்த்தப்பட்டது.

அஸ்வினி பட்/ஷிகா கௌதம் ஜோடி 5-21, 21-18, 13-21 என, போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் தென் கொரியாவின் கிம் சோ யோங்/கோங் ஹி யோங் இணையிடம் போராடி வீழ்ந்தது. பூஜா தண்டூ/சஞ்சனா சந்தோஷ் கூட்டணி 15-21, 7-21 என, போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த தென் கொரியாவின் லீ சோ ஹீ/ஷின் சியுங் சான் ஜோடியிடம் தோற்றது.

ஆனால், ஆடவா் இரட்டையா் பிரிவில் 2 ஜோடிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளன. 2-ஆவது சுற்றில் எம்.ஆா்.அா்ஜுன்/துருவ் கபிலா ஜோடி 21-17, 21-16 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் கிம் ஆஸ்ட்ரப்/ஆண்டா்ஸ் ஸ்காரப் கூட்டணியை முறியடித்தது.

போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி கூட்டணி 21-8, 21-10 என கௌதமாலாவின் சோலிஸ் ஜோனதன்/அனிபல் மரோகின் ஜோடியை எளிதாகச் சாய்த்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com