கோலி அரைசதம்: சூர்யகுமாரின் சூறாவளியால் இந்தியா 192 ரன்கள் குவிப்பு

கோலி அரைசதம்: சூர்யகுமாரின் சூறாவளியால் இந்தியா 192 ரன்கள் குவிப்பு

ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்துள்ளது.

ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்துள்ளது.

ஆசியக் கோப்பை டி20யின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் நிசாகத் கான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

 இந்திய அணியில் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் கேஎல் ராகுல் களமிறங்கினர்.

கடந்த ஆட்டத்தில் சற்று திணறிய ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த ஆட்டத்தில் 'டக்' அவுட் ஆன கேஎல் ராகுலுக்கு இது உதவியது.

ஆனால், ரோஹித் 21 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி இன்னிங்ஸை கட்டமைக்க, மறுமுனையில் ராகுல் சரியான டைமிங் கிடைக்காமல் திணறினார். இரண்டு சிக்ஸர்கள் அடித்தாலும், அவரது இயல்பான ஆட்டத்துக்கு அவரால் திரும்ப முடியவில்லை.

இருந்தபோதிலும், இந்த இணை நல்ல பாட்னர்ஷிப் அமைத்தது. அதிரடி ஆட்டத்துக்கு மாற தொடர்ந்து முயற்சித்து வந்த ராகுல் 39 பந்துகளில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இவர் வந்ததிலிருந்து ஆட்டத்தின் போக்கே மாறியது. முதலிரண்டு பந்துகளில் பவுண்டரி விளாசி அதிரடியைத் தொடர்ந்தார் சூர்யகுமார்.

மறுமுனையில் கோலியும் சிக்ஸர்கள் அடிக்கத் தொடங்கி துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியின் ஸ்கோர் 150-ஐ தாண்டத் தொடங்கியது. 19-வது ஓவரில் விராட் கோலி அரைசதத்தைக் கடந்தார். கோலியின் ஃபார்ம் குறித்து தொடர்ந்து எழுந்து வந்த சர்ச்சைகளுக்கு பாகிஸ்தான் ஆட்டத்திலேயே முற்றுப் புள்ளி வைத்தபோதிலும், இந்த அரைசதம் அதை அழுத்தமாகப் பதிவு செய்தது. 

சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் ஒன்றுக்கு நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்டு, இந்தியா தொடக்கத்தில் எதிர்பார்த்திராத முடிவைத் தந்தார். அவரும் 22-வது பந்தில் அரைசதத்தைக் கடந்தார்.

கடைசி ஓவரில் 26 ரன்கள் கிடைத்ததன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 44 பந்துகளில் 59 ரன்கள் எடுக்க, சூர்யகுமார் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 26 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com