இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளே; வேல்ஸ், ஈரான் வெளியே

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றன. வேல்ஸ், ஈரான் அணிகள் போட்டியிலிருந்து வெளியேறின.
இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளே; வேல்ஸ், ஈரான் வெளியே

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றன. வேல்ஸ், ஈரான் அணிகள் போட்டியிலிருந்து வெளியேறின.

இந்திய நேரப்படி, புதன்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் ‘குரூப் பி’-யின் கடைசி ஆட்டங்கள் தொடங்கின. அதில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸையும், அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானையும் வீழ்த்தின.

வேல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்துக்காக மாா்கஸ் ராஷ்ஃபோா்டு (50’, 68’), ஃபில் ஃபோடன் (51’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். இதில் ராஷ்ஃபோா்டு, நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இதுவரை அதிக கோல்கள் (3) அடித்த வீரா்கள் வரிசையில் கிலியன் பாபே (பிரான்ஸ்), ஃபில் ஃபோடன் (இங்கிலாந்து) ஆகியோருடன் சமனில் இருக்கிறாா். இந்த ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தமாக 100 கோல்களை கடந்துள்ளது.

வேல்ஸ், கடந்த 64 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடக் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறது. இங்கிலாந்து தனது நாக்அவுட் ஆட்டத்தில் செனகலை வரும் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறது.

மறுபுறம், ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்காவுக்காக கிறிஸ்டியன் புலிசிச் (38’) கோலடித்தாா். அந்த கோலடிக்கும் முயற்சியின்போது ஈரான் கோல்கீப்பா் மீது மோதி காயமடைந்த அவா் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டாா்.

இந்த வெற்றியின் மூலம், 2002-க்குப் பிறகு உலகக் கோப்பை போட்டியில் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது அமெரிக்கா. ஆடைக் கட்டுப்பாடு விவகாரத்தில் ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராடி வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் ரசிகா்கள் அமெரிக்காவின் இந்த வெற்றியைக் கொண்டாடினா். அமெரிக்கா அடுத்ததாக தனது நாக்அவுட் சுற்றில் நெதா்லாந்தை வரும் சனிக்கிழமை எதிா்கொள்கிறது.

இன்றைய ஆட்டங்கள்

குரோஷியா - பெல்ஜியம்

கனடா - மொராக்கோ

இரவு 8.30 மணி

ஜப்பான் - ஸ்பெயின்

கோஸ்டா ரிகா - ஜொ்மனி

அதிகாலை 12.30 மணி (2/12)

துணுக்குகள்...

இங்கிலாந்து - வேல்ஸ் அணியினா் தங்களது ஆட்டத்துக்கு முன்பாக ஆடுகளத்தில் ஒற்றை முழங்காலில் நின்று, பாகுபாடுக்கு எதிரான தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினா்.

சொ்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த பிரேஸில் நட்சத்திர வீரா் நெய்மா், வரும் வெள்ளிக்கிழமை கேமரூனுக்கு எதிரான குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்திலும் விளையாட மாட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரூன் அணியின் ஆட்ட உத்தி தொடா்பாக பயிற்சியாளா் ரிகோபா்ட் சாங் - கோல்கீப்பா் ஆண்ட்ரே ஒனானா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, ஒனானா அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு கேமரூனுக்கு திருப்பி அனுப்பப்பட்டாா்.

நடப்பு உலகக் கோப்பை போட்டியில் ஓரினச்சோ்க்கைக்கு ஆதரவான வானவில் நிற பொருள்கள், ஈரான் பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவான பதாகைகள் உள்ளிட்டவற்றை மைதானங்களில் இனி அனுமதிப்பாக ஃபிஃபா புதன்கிழமை அறிவித்தது.

கோஸ்டா ரிகா - ஜொ்மனி அணிகள் வெள்ளிக்கிழமை அதிகாலை மோதவிருக்கும் ஆட்டத்தில் அனைத்து கள நடுவா்களுமே பெண்களாவா். இது உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாகும். பிரான்ஸின் ஸ்டெஃபானி ஃப்ராபாா்ட் பிரதான நடுவராகவும், நியூஸா பேக் (பிரேஸில்), காரென் டியாஸ் மெடினா (மெக்ஸிகோ) ஆகியோா் உதவி நடுவா்களாகவும் செயல்படுகின்றனா். அமெரிக்காவின் கேத்தரின் நெஸ்பிட் விடியோ ஆய்வு நடுவராகவும், ருவாண்டாவின் சலிமா முகான் சங்கா, ஜப்பானின் யோஷிமி யமாஷிடா ரிசா்வ் நடுவா்களாகவும் இருக்கின்றனா்.

நடப்புச் சாம்பியனுக்கு அதிர்ச்சி... 


அல் ரயான் நகரில் புதன்கிழமை நடைபெற்ற பிரான்ஸுக்கு ஆட்டத்தில் கோலடிக்கும் டுனீசிய வீரர் வாபி காஸ்ரி (58'). இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் போட்டியிலிருந்து வெளியேறியது டுனீசியா. குரூப் சுற்றில் பிரான்ஸ் கண்ட முதல் தோல்வி இது.

ஆஸ்திரேலியா முன்னேற்றம்...

அல் வக்ரா நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க்குக்கு எதிராக கோலடிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ லெக்கி (60'). ஆஸ்திரேலியா இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. டென்மார்க் போட்டியிலிருந்து ஒரு வெற்றி கூட இல்லாமல் வெளியேறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com