டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள்!

10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 80 ரன்கள் பின்தங்கியுள்ளது.
டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள்!

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. 

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டை 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மிர்பூரில் வியாழன் அன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆடுகளத்தில் புற்கள் நிறைய இருந்ததால் சிராஜ், உமேஷ் யாதவ், உனாட்கட் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளது இந்திய அணி. இதனால் கடந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகனாகத் தேர்வான குல்தீப் யாதவ் இம்முறை நீக்கப்பட்டுள்ளார்.

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மொமினுல் ஹக் 84 ரன்கள் எடுத்தார். கடைசி 5 விக்கெட்டுகளை 14 ரன்களுக்கு வீழ்த்தியது இந்தியா. உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளும் உனாட்கட் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி, 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 14, ராகுல் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இன்று முதல் பகுதியில் வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தார். கேப்டன் ராகுல் 10, ஷுப்மன் கில் 20, புஜாரா 24 ரன்களுக்கு தைஜுல் பந்தில் ஆட்டமிழந்தார்கள். முதல் பகுதியில் 28 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை 67 ரன்களை எடுத்தது இந்திய அணி. மதிய உணவு இடைவேளையின்போது 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.

விராட் கோலி 24 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ரிஷப் பந்தும் ஷ்ரேயஸ் ஐயரும் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்கள். விரைவாக ரன்கள் எடுத்து வங்கதேச அணியை இந்த டெஸ்டில் ஆதிக்கம் பெறவிடாமல் தடுத்தார்கள். 49 பந்துகளில் அரை சதமெடுத்தார் ரிஷப் பந்த். இதன்பிறகு சிக்ஸர்களை அதிகமாக அடிக்க ஆரம்பித்தார். ரிஷப் பந்த் - ஷ்ரேயஸ் கூட்டணி 116 பந்துகளில் 100 ரன்களை எட்டியது. ஷ்ரேயஸ் ஐயர் 60 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். 2-ம் நாளின் 2-ம் பகுதியில் இந்திய அணி 25 ஓவர்களில் 140 ரன்கள் குவித்தது. இருவரும் அளித்த கேட்சுகளை வங்கதேச ஃபீல்டர்கள் தவறவிட்டதால் அந்த வாய்ப்பை நன்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். 

இந்திய அணி தேநீர் இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் 86, ஷ்ரேயஸ் ஐயர் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு ரிஷப் பந்த் 93 ரன்களுக்கும் ஷ்ரேயஸ் ஐயர் 87 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இருவரும் 159 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 86.3 ஓவர்களில் 314 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. தைஜுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

2-வது நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி 10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 80 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com