ரஞ்சி: லீக் ஆட்டங்கள் பிப்.16 முதல் மாா்ச் 5 வரை
By DIN | Published On : 01st February 2022 07:49 AM | Last Updated : 01st February 2022 07:49 AM | அ+அ அ- |

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பகுதியான லீக் ஆட்டங்கள், வரும் 16-ஆம் தேதி முதல் மாா்ச் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
வழக்கமான அட்டவணைப்படி ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய இப்போட்டி, கரோனா சூழல் காரணமாக தற்போது தாமதமாகியுள்ளது. லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த பிறகு நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் ஐபிஎல் போட்டிக்குப் பிறகு ஜூன் மாதம் நடைபெறவுள்ளன.
இதன் ஆட்டங்கள் அகமதாபாத், கொல்கத்தா, திருவனந்தபுரம், கட்டாக், சென்னை, குவாஹாட்டி, ஹைதராபாத், பரோடா, ராஜ்கோட் ஆகிய 9 இடங்களில் பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தில் நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்கும் 38 அணிகள், 8 குரூப்களில் தலா 4 அணிகளாகவும், பிளேட் குரூப்களில் 6 அணிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
ரஞ்சி வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஆண்டு இப்போட்டி கரோனா சூழல் காரணமாக நடத்தப்படாமல் கைவிடப்பட்டது. உள்நாட்டு போட்டியாளா்களுக்கான நிதியாதாரமாக இருக்கும் போட்டி, கிரிக்கெட் வளா்ச்சிக்கான முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது.