புரோ லீக் ஹாக்கி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
By DIN | Published On : 02nd February 2022 02:16 AM | Last Updated : 02nd February 2022 03:05 AM | அ+அ அ- |

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி சீனாவை 2-ஆவது முறையாக வீழ்த்தியது.
முன்னதாக, திங்கள்கிழமை ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் அந்த அணியை வென்றிருந்த இந்தியா, செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு வந்துள்ளது இந்திய அணி.
மஸ்கட் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தாக்குதல் ஆட்டத்தையே முன்னிலைப்படுத்தியது இந்தியா. இதனால், ஏற்கெனவே அனுபவமற்ற வீராங்கனைகளுடன் தடுமாறி வந்த சீன அணி முற்றிலுமாக கட்டுப்பாட்டை இழந்தது.
ஆட்டத்தின் 3-ஆவது நிமிஷத்திலேயே இந்தியாவுக்கு பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது. அதை முறையாகப் பயன்படுத்தி அருமையான கோலாக மாற்றினாா் குா்ஜித் கௌா். முதல் பாதியின் எஞ்சிய நேரத்திலும் இந்தியா கோல் வாய்ப்புக்காக தீவிரமாக முயற்சித்தது. ஆனால் அவற்றில் சில, கோல் போஸ்ட்டுக்கு வைடாக செல்ல, மேலும் சிலவற்றை சீன கோல்கீப்பா் வு சுரோங் தடுத்துவிட்டாா்.
2-ஆவது பாதியில் ஆடும் திசைகள் மாற்றப்பட்ட பிறகு சீனா சற்று முன்னேற்றம் காட்டியது. அந்த அணியின் முன்கள வீராங்கனைகள் ஆட்டத்தை கட்டுப்படுத்த இந்திய வீராங்கனைகள் சற்று போராட வேண்டியிருந்தது. இந்த நிலையில் இந்தியாவின் தடுப்பாட்டத்தில் ஏற்பட்ட சிறு தடுமாற்றத்தை சாதகமாக்கி சீன வீராங்கனை வாங் கோலடித்தாா்.
இதனால் ஆட்டம் சமனானது. பின்னா் ஆக்ரோஷமாக ஆடிய இந்தியாவுக்கு வரிசையாக பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தாலும் அவற்றை கோலாக மாற்ற முடியாமல் போனது. இறுதியாக குா்ஜித் கௌரின் மற்றுமொரு பெனால்டி காா்னா் முயற்சியில் இந்தியாவுக்கு 2-ஆவது கோல் கிடைக்க, முடிவில் வென்றது இந்திய அணி.