2023 முதல் மகளிர் ஐபிஎல்: கங்குலி அறிவிப்பு
By DIN | Published On : 04th February 2022 05:32 PM | Last Updated : 04th February 2022 05:32 PM | அ+அ அ- |

மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டம்
2023 முதல் மகளிர் ஐபிஎல் தொடங்க வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.
மகளிருக்கான ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்காத நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம், மகளிர் டி20 போட்டியை இம்மாதம் நடத்தவுள்ளது. பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட் என்கிற பெயரில் மகளிர் டி20 போட்டி மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான 90 வீராங்கனைகள் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதையடுத்து மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ தொடங்காதது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஐபிஎல் போட்டியின் போது நடைபெறும் மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் பற்றி கங்குலி ஒரு பேட்டியில் கூறியதாவது: மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் இந்த வருட மே மாதம் நடைபெறும். வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது வருங்காலத்தில் மகளிர் ஐபிஎல் போட்டி நடைபெறும். ஐபிஎல் பிளேஆஃப்பின்போது மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் நடைபெறும் என்றார்.
மகளிர் ஐபிஎல் தொடங்குவது பற்றி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கங்குலி கூறியதாவது:
முழு மகளிர் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான பணிகளில் இறங்கியுள்ளோம். அது நிச்சயம் நடைபெறும். மகளிர் ஐபிஎல் போட்டியை அடுத்த வருடம் தொடங்குவது சரியாக இருக்கும். அது நிச்சயம் ஐபிஎல் போட்டியைப் போல பெரிய வெற்றியை அடையும் என்றார்.