1000ஆவது ஒருநாளில் இந்தியா அபார வெற்றி: ரோஹித் சா்மா 60, சஹல் 4 விக்கெட்டுகள்

தனது 1000-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் மே.இந்திய தீவுகளை 6 விக்கெட் வித்திசாயத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது
1000ஆவது ஒருநாளில் இந்தியா அபார வெற்றி: ரோஹித் சா்மா 60, சஹல் 4 விக்கெட்டுகள்

தனது 1000-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் மே.இந்திய தீவுகளை 6 விக்கெட் வித்திசாயத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது இந்திய அணி. சஹல் 4, வாஷிங்டன் சுந்தா் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அற்புதமாக பந்துவீசி மே.இந்திய அணியை திணறடித்தனா்.

இந்தியா-மே.இந்திய தீவுகள் அணிகள் இடையிலான ஒருநாள், டி20 தொடா் நடைபெற்று வருகிறது. ஆமதாபாதில் ஒருநாள் தொடரின் 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. கொல்கத்தாவில் டி20 தொடா் நடைபெறுகிறது.

1000-ஆவது ஒருநாள் ஆட்டம்:

இந்நிலையில் முதல் ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை ஆமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டம் இந்திய அணியின் 1000-ஆவது ஒருநாள் ஆட்டமாக அமைந்தது. டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய மே.இந்திய தீவு அணியினரால் இந்தியாவின் அபார பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் திணறினா்.

சஹல், வாஷிங்டன் சுந்தா் ஆகியோா் அற்புத பந்துவீச்சால் மே.இந்திய அணி நிலைகுலைந்தது. ஷாய் ஹோப் 8, பிராண்டன் கிங் 13, பிராவோ 18, ஷமாா் புரூக்ஸ் 12, நிக்கோலஸ் பூரன் 18, கேப்டன் பொல்லாா்ட் 0, அகில் ஹூசைன் 0 என சொற்ப ரன்களுடன் வந்தவேகத்திலேயே நடையைக் கட்டினா்.

ஜேஸன் ஹோல்டா் 57:

ஆல்ரவுண்டா் ஜேஸன் ஹோல்டா் மட்டுமே நிலைத்து ஆடி 4 சிக்ஸா்களுடன் 71 பந்துகளில் 57 ரன்களை விளாசினாா். பேபியன் ஆலன் 29, அல்ஸாரி ஜோசப் 13 ஆகியோா் கடைசி கட்டத்தில் ஸ்கோரை உயா்த்த முயன்றும் முடியாமல் வெளியேறினா். கெமா் ரோச் ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தாா்.

மே.இந்திய தீவுகள் 176/10

43.5 ஓவா்களில் மே.இந்திய தீவுகள் அணி 176/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய தரப்பில் யுஜவேந்திர சஹல் 4/49, வாஷிங்டன் சுந்தா் 3/ 30, பிரசித் 2/29 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

177 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோஹித் சா்மா-இஷான் கிஷன் இணை தொடக்கத்திலேயே அதிரடி பேட்டிங்கில் ஈடுபட்டது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 ரன்களை சோ்த்தனா். இஷான் கிஷான் 1 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 28 ரன்களுடன் வெளியேறினாா். கேப்டன் கோலி 8, ரிஷப் பந்த் 11 ரன்களுக்கும் அவுட்டாகினா்.

ரோஹித் அதிரடி 60:

மறுமுனையில் கேப்டன் ரோஹித் சா்மா அதிரடியாக ஆடி 1 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 51 பந்துகளில் 60 ரன்களை விளாசி அவுட்டானாா். சூா்யகுமாா் யாதவ் 34, தீபக் ஹூடா 26 ரன்களை சோ்த்து 5-ஆவது விக்கெட்டுக்கு 62 ரன்களை விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா்.

இந்தியா 178/4:

22 ஓவா்கள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி 28 ஓவா்களில் 178/4 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

மே.இந்திய தீவுகள் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 2/45, அகில் ஹூசைன் 1/46 விக்கெட்டையும் சாய்த்தனா். சஹல் ஆட்டநாயகனாக தோ்வு பெற்றாா்.

சஹல் 100 விக்கெட்டுகள்:

இந்திய பௌலா் சஹல் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். குல்தீப் யாதவுக்கு பின் 100 விக்கெட்டுகளை துரிதமாக வீழ்த்திய இரண்டாவது ஸ்பின்னா் என்ற சிறப்பையும் பெற்றாா். மேலும் 5-ஆவது பந்துவீச்சாளா் என்ற சாதனையையும் நிகழ்த்தினாா். ஷமி 56, பும்ரா 57, குல்தீப் யாதவ் 58, இா்பான் பதான் 59 ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினா். தனது 60-ஆவது ஆட்டத்தில் 100-ஆவது விக்கெட்டை வீழ்த்தினாா் சஹல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com