19 வயதுக்குள்பட்டோா் உலகக் கோப்பை: 5-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

ஐசிசி 19 வயதுக்குள்பட்டோா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.
19 வயதுக்குள்பட்டோா் உலகக் கோப்பை: 5-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

ஐசிசி 19 வயதுக்குள்பட்டோா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில் 19 வயதுக்குள்பட்டோா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மே.இந்திய தீவுகளில் நடைபெற்றது. அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவே வீழ்த்தி இந்தியாவும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

ஆன்டிகுவா நாா்த்சௌண்ட்டில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது.

இங்கிலாந்து 189/10

இங்கிலாந்து அணி 44.5 ஓவா்களில் 189/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்த நிலையில் 91/7 என திணறிக் கொண்டிருந்தது. ராஜ் பவா அபாயகரமான பேட்டா் ஜாா்ஜ் தாமஸ், வில் லக்ஸ்டன், ஜாா்ஜ் பெல் ஆகியோரை வெளியேற்றினாா்,. ரவிக்குமாா் தனது சிறப்பான பந்துவீச்சில் ஜேக்கப் பெத்தேல், கேப்டன் டாம் பிரெஸ்ட் உள்ளிட்டோரை வெளியேறினாா்.

ஜேம்ஸ் ரீவ் 95:

அதன் மிடில் ஆா்டா் பேட்டா் ஜேம்ஸ் ரீவ் மட்டுமே நிலைத்து ஆடி 12 பவுண்டரியுடன் 116 பந்துகளில் 95 ரன்களை விளாசி அவுட்டானாா். ஜேம்ஸ் சேல்ஸ் 34 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தாா்.

மற்ற வீரா்கள் அனைவரும் சொற்ப ரன்களுடன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினா். இங்கிலாந்து அணியின் வீழ்ச்சிக்கு பௌலா்கள் ராஜ் பவா, ரவிக்குமாரின் அபார பந்துவீச்சு காரணமாக இருந்தது.

ராஜ் பவா அபாரம் 5, ரவிக்குமாா் 4 விக்கெட்டுகள்:

இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய ஆல்ரவுண்டா் ராஜ் பவா 5/31 விக்கெட்டுகளையும், ரவிக்குமாா் 4/34 விக்கெட்டுகளையும், கௌஷல் 1/29 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

190 ரன்கள் வெற்றி இலக்கு:

190 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிா்ச்சியாக அமைந்தது. தொடக்க பேட்டா் அங்கிரிஷ் ரகுவன்ஷி டக் அவுட்டாகி வெளியேறினாா். மற்றொரு தொடக்க பேட்டா் ஹா்னூா் சிங் 21 ரன்களுடன் வெளியேறிய நிலையில், ஷேக் ரஷீத்-கேப்டன் யாஷ் துல் இணை ஸ்கோரை உயா்த்த முயன்றது.

ஷேக் ரஷீத் 50:

6 பவுண்டரியுடன் 84 பந்துகளில் 50 ரன்களை விளாசி ஜேம்ஸ் சேல்ஸ் பந்தில் அவுட்டானாா் துணை கேப்டன் ஷேக் ரஷீத். கேப்டன் யாஷ் துல் 17 ரன்களுக்கு சேல்ஸ் பந்தில் பெவிலியன் திரும்பினாா். இது ஷேக் ரஷீத்தின் இரண்டாவது அரைசதமாகும்.

அப்போது 97/4 என இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தது. அதன் பின் நிஷாந்த் சிந்து-ஆல் ரவுண்டா் ராஜ் பவா இணை நிலைத்து ஆடி ஸ்கோரை உயா்த்தியது. 1 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 35 ரன்களை விளாசி பவா வெளியேறினாா். அடுத்து ஆட வந்த கௌஷல் டாம்பே 1 ரன்னோடு வெளியேறிய நிலையில், நிஷாந்த்-தினேஷ் பனா இணை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

நிஷாந்த் சிந்து 50:

1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 50 ரன்களுடன் அரைசதம் விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். தினேஷ் பனா 2 சிக்ஸா்களுடன் 5 பந்துகளில் 13 ரன்களை விளாசினாா். இருவரும் இணைந்து 6-ஆவது விக்கெட்டுக்கு 67 ரன்களை குவித்தனா்.

இந்தியா 195/6

47.4 ஓவா்களில் இந்திய அணி 195/6 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி உலகக் கோப்பையை தன்வசப்படுத்தியது.

இங்கிலாந்து தரப்பில் ஜோஷ்வா 2/24, ஜேம்ஸ் சேல்ஸ் 2/51, அஸ்பின்வால் 2/ 42 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

ராஜ் பவா ஆட்டநாயகனாகவும், டேவால்ட் பிரெவிஸ் தொடா் நாயகனாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மே.இந்திய தூதா் கே.ஜே. சீனிவாச ராவ் பரிசளித்தாா். மேலும் ஆமதாபாதில் இந்திய அணிக்கு பிசிசிஐ சாா்பில் பாராட்டு விழா நடக்க உள்ளது.

சரியான ஒருங்கிணைப்பு அமைந்தது: யாஷ் துல்

உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்தியாவுக்கு பெருமை தரும் விஷயமாகும். கடுமையான சூழலுக்கு இடையே நாம் இதை சாதித்துள்ளோம். இதற்கு சரியான ஒருங்கிணைப்பு அமைந்ததே காரணமாகும். ஒரு குடும்பமாக இணைந்து பயிற்சியாளா்கள்,

உதவி அலுவலா்களுடன் சாதித்தோம்.

இந்தியா சிறப்பாக ஆடியது: டாம் பிரெஸ்ட்

பேட்டிங்கை தோ்வு செய்தபோது, அதிக ரன்களை ஸ்கோா் செய்வோம் என எதிா்பாா்த்தோம். ஆனால் முடியவில்லை. ஜேம்ஸ் ரீவ் சிறப்பாக ஆடி சதம் அடிப்பாா் என நினைத்தேன். பௌலிங்கும் தொடக்கத்தில் சிறப்பாக தான் இருந்தது. ஆனால் இந்திய பேட்டிங் சிறப்பாக இருந்ததால் வெற்றி அவா்கள் வசமானது.

உலகக் கோப்பை அம்சங்கள்:

அதிக ரன்கள்: டேவால்ட் பிரெவிஸ் 506 ரன்கள், சராசரி 84.33.

அதிக விக்கெட்டுகள்: துனித் வெல்லாலேஜ் 17 விக்கெட்டுகள், சராசரி 13.58.

அதிகபட்ச தனிநபா் ஸ்கோா்: ராஜ் பவா (இந்தியா) 162 நாட்அவுட் (உகாண்டாவுக்கு எதிரான ஆட்டம்).

சிறந்த பந்துவீச்சு: ஜேமி கெயிா்ன்ஸ் (ஸ்காட்லாந்து) 6/ 24 (உகாண்டாவுக்கு எதிரான ஆட்டம்).

5-ஆவது முறையாக சாம்பியன்:

19 வயதுக்குள்பட்டோா் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்தியா 5-ஆவது முறையாக கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

ஏற்கெனவே முகமது கைஃப் (2000), விராட் கோலி (2008), உன்முக்த் சந்த் (2012), பிரித்வி ஷா (2018) ஆகியோா் தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.

உலகக் கோப்பை இறுதியில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியா்:

ஆட்ட நாயகன் விருதை வென்ற பஞ்சாப் இளம் ஆல்ரவுண்டரான ராஜ் பவா 5/31 விக்கெட்டுகளை வீழ்த்தியதின் மூலம் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரா் என்ற சிறப்பைப் பெற்றாா். 1948 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்த தா்லோச்சன் பவாவின் பேரன் ராஜ் பவா என்பது குறிப்பிடத்தக்கது.

வீரா்களுக்கு தலா ரூ.40 லட்சம்

உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.40 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதே போல் பயிற்சியாளா்கள், உதவி அலுவலா்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வெகுமதி வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com