சரிவிலிருந்து மீட்டெடுத்த ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த்: இந்தியா 265 ரன்கள்

38 ஓவர்களுக்குள் முதல் 6 பேட்டர்கள் ஆட்டமிழந்ததால் இந்திய அணிக்கு மற்றொரு நெருக்கடி ஏற்பட்டது.
சரிவிலிருந்து மீட்டெடுத்த ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த்: இந்தியா 265 ரன்கள்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்துள்ளது.

மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இன்றுடன் ஒருநாள் தொடர் நிறைவுபெறுகிறது. டி20 தொடர் பிப்ரவரி 16 அன்று தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறுகின்றன.

மே.இ. தீவுகளுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. 3-வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஒருநாள் தொடரை வென்ற காரணத்தால் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், குல்தீப் யாதவ், தீபக் சஹார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். கே.எல். ராகுல், தீபக் ஹூடா, சஹால், ஷர்துல் தாக்குர் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. மே.இ. தீவுகள் அணியில் அகேல் ஹுசைனுக்குப் பதிலாக ஹேடன் வால்ஷ் இடம்பெற்றார். பூரன் கேப்டனாக உள்ளார். 

இன்றைய ஆட்டத்தின் 4-வது ஓவரை வீசிய அல்ஸாரி ஜோசப், அதே ஓவரில் ரோஹித் சர்மாவை 13 ரன்களிலும் விராட் கோலியை ரன் எதுவும் எடுக்க விடாமலும் வீழ்த்தினார். இதன்பிறகு ஷிகர் தவன், 10 ரன்களில் ஓடியன் ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி, 42 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி ஆகிய மூவரும் ஒன்றாக இதுவரை 109 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்கள். இதில், இப்போதுதான் முதல்முறையாக 15 ரன்களுக்குக் குறைவாக எடுத்து மூவரும் ஆட்டமிழந்துள்ளார்கள். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மொத்தமாகவே 26 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார் விராட் கோலி. இந்த ஒருநாள் தொடரில் 8,18,0 என மொத்தமாகவே 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 51, 0, 65 என நன்றாக விளையாடியவர் இம்முறை சொதப்பிவிட்டார்.

முக்கியமான 3 பேட்டர்களும் நன்றாக விளையாடாததால் நடுவரிசை பேட்டர்களுக்கு அணியின் சரிவைத் தடுத்து ஸ்கோரை உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. ஷ்ரேயஸ் ஐயரும் ரிஷப் பந்தும் நிலைமையை உணர்ந்து விளையாடினார்கள். 24-வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களைத் தொட்டது. ஷ்ரேயஸ் ஐயர் 74 பந்துகளிலும் பந்த் 47 பந்துகளிலும் அரை சதங்களை எட்டினார்கள். நன்கு விளையாடி வந்த ரிஷப் பந்த் 30-வது ஓவரின் முடிவில் 56 ரன்களுக்கு வால்ஷ் பந்தில் ஆட்டமிழந்தார். ஐயர் - பந்த் ஜோடி 124 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர், 111 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்து வால்ஷ் பந்தில் ஆட்டமிழந்தார்.

38 ஓவர்களுக்குள் முதல் 6 பேட்டர்கள் ஆட்டமிழந்ததால் இந்திய அணிக்கு மற்றொரு நெருக்கடி ஏற்பட்டது. கீழ்நடுவரிசை பேட்டர்களான வாஷிங்டன் சுந்தரும் தீபக் சஹாரும் அருமையான கூட்டணி அமைத்து இந்திய அணி நல்ல ஸ்கோர் எடுக்க இன்னொரு முக்கியக் காரணமாக அமைந்தார்கள். இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 51 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்கள். இன்றும் பேட்டிங்கில் அசத்திய தீபக் சஹார், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 38 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.

இந்திய அணி 50 ஓவர்களில் 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மே.இ. அணி வீரர் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com