ஐபிஎல் 2022 போட்டியைத் தவறவிடும் மூன்று டி20 சாதனையாளர்கள்

கடந்த வருடம் வரை இந்த மூன்று டி20 சாதனையாளர்களும் ஐபிஎல் போட்டியை அலங்கரித்தார்கள்...
ஐபிஎல் 2022 போட்டியைத் தவறவிடும் மூன்று டி20 சாதனையாளர்கள்

கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா. 

இந்த மூன்று பேரும் ஐபிஎல் போட்டியின் ஜாம்பவான்கள். ஆனால் இந்த வருடம் இவர்களை ஐபிஎல் களத்தில் காண முடியாது, முதல்முறையாக. 

*

பிரபல கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார். 

Caption
Caption

2018 மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற வைத்து, 2021 டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கும் முயற்சிகள்  நடைபெற்று வந்தன. எனினும் ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற டி வில்லியர்ஸ் மறுத்துவிட்டார். இன்னொரு வீரரின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்க விரும்பாததால் ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற டி வில்லியர்ஸ் மறுத்துவிட்டார் என தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பெளச்சர் கூறினார்.

2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்தார். எனினும் அவருடைய விருப்பத்தை தெ.ஆ. தேர்வுக்குழு நிராகரித்தது. 10 நாடுகள் பங்கேற்ற அப்போட்டியில் தெ. ஆ. அணி 7-ம் இடம் பிடித்தது. 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் உள்ளிட்ட டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார் டி வில்லியர்ஸ். 2021 ஐபிஎல் போட்டியில் 15 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 313 ரன்கள் எடுத்தார்.  ஸ்டிரைக் ரேட் - 148.34. 

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்ததால் அவர் இனிமேல் ஐபிஎல் போட்டியிலும் விளையாடப் போவதில்லை. ஓய்வை அறிவித்தபோது ஐபிஎல், ஆர்சிபி பற்றி அவர் கூறியதாவது:

37 வயதில் முன்பு போல சுடர் பிரகாசமாக எரிவதில்லை. ஆர்சிபி அணியுடன் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். 11 வருடங்கள் விரைவாகக் கடந்துவிட்டன. நீண்ட யோசனைக்குப் பிறகே ஓய்வு பெற முடிவெடுத்தேன். ஆர்சிபி அணி, என்னுடைய நண்பர் கோலி, அணி வீரர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்சிபி அணி எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எப்போதும் நெருக்கமாக இருக்கும். நான் எப்போதும் ஆர்சிபி ரசிகர் என்றார். 

*

ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் கிறிஸ் கெயில் தான். இனிமேல் அந்த இமாலய சிக்ஸர்களைக் காண வாய்ப்பு கிடைக்காது. தன் பெயரைப் பதிவு செய்யாததால் நேற்றுடன் முடிவடைந்த ஐபிஎல் ஏலத்தில் அவர் பங்கேற்கவில்லை. 

ஐபிஎல் 2021 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் கிறிஸ் கெயில். கடந்த வருடப் போட்டியில் 10 ஆட்டங்களில் விளையாடி 193 ரன்கள் எடுத்தார். திடீரென ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலக முடிவெடுத்து கரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேறினார் கெயில். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் துபையில் நான் இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். எனக்கு ஓய்வளிக்க சம்மதம் தெரிவித்த பஞ்சாப் அணிக்கு நன்றி என்று கூறினார்.

டி வில்லியர்ஸ் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு எடுத்ததையடுத்து கெயிலும் ஐபிஎல்-லில் இருந்து விலகியிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஐபிஎல் போட்டியின் வெற்றிக்கு அதிகமாக உழைத்த வெளிநாட்டு வீரர்களில் முதல் இரு இடங்களை டி வில்லியர்ஸுக்கும் கிறிஸ் கெயிலுக்கும் வழங்கலாம். அந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய இருவரையுமே ஐபிஎல் 2022 போட்டியில் காண முடியாது என்பது வருத்தமான விஷயம் தான்.

ஐபிஎல் போட்டியில் 142 ஆட்டங்களில் விளையாடி 4965 ரன்கள் எடுத்துள்ளார் கெயில். ஸ்டிரைக் ரேட் - 148.96. ஐபிஎல் போட்டியில் அதிக சதங்கள் (6), அதிக சிக்ஸர்கள் (357) அடித்தவரும் கெயில் தான். 2013-ல் புணே அணிக்கு எதிராக கெயில் அடித்த 175* ரன்கள் தான் இன்றைக்கும் ஐபிஎல்-லில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது. ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளார். 

2008-ல் கொல்கத்தா அணி கெயிலை முதல்முதலாகத் தேர்வு செய்தது. காயம் காரணமாக அப்போது ஓர் ஆட்டத்திலும் அவர் விளையாடவில்லை. 2009-ல் தில்லி அணியில் அறிமுகமானார். 2011-ல் ஆர்சிபி அணிக்குத் தேர்வானார். அதிலிருந்து கெயிலின் தனித்துவமான டி20 திறமையை உலகம் அறிய ஆரம்பித்தது. முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணிக்கு எதிராக 55 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்தார். 2018-ல் கெயில் - ஆர்சிபி கூட்டணி பிரிந்தது. 2021 வரை பஞ்சாப் அணிக்காக கெயில் விளையாடினார். ஐபிஎல் 2022 போட்டிக்காக இரு வீரர்களை மட்டும் தக்கவைத்த பஞ்சாப் அணி, கெயிலைத் தக்கவைக்கவில்லை. ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதை கெயில் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில், தனது கடைசி ஆட்டத்தைச் சொந்த ஊரான ஜமைக்காவில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். 42 வயது கெயில் - 103 டெஸ்டுகள், 301 ஒருநாள், 79 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

*

சுரேஷ் ரெய்னா கதையே வேறு. ஐபிஎல் 2022 போட்டியில் விளையாட அவர் விருப்பம் தெரிவித்தாலும் சிஎஸ்கே உள்பட எந்த அணியும் அவரைத் தேர்வு செய்யவில்லை. கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவுக்காக விளையாடி 11 ஆட்டங்களில் 160 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் 35 வயது ரெய்னாவுக்குப் பதிலாக சிஎஸ்கேவுக்கு உத்தப்பா கிடைத்துவிட்டதால் ரெய்னாவை இந்தமுறை சிஎஸ்கே சீந்தவில்லை. 

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5528 ரன்களுடன் 4-ம் இடத்தில் உள்ளவர் ரெய்னா. 1 சதமும் 39 அரை சதங்களும் எடுத்துள்ளார். ரெய்னாவை எந்த அணியும் தேர்வு செய்யாததற்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் வருத்தம் தெரிவித்துள்ளார்கள். 

*

கடந்த வருடம் வரை இந்த மூன்று டி20 சாதனையாளர்களும் ஐபிஎல் போட்டியை அலங்கரித்தார்கள். இவர்கள் இன்றி முதல்முறையாக ஐபிஎல் போட்டியைக் காணப் போகிறோம். காலம் மாறுகிறது, காட்சிகள் மாறுகின்றன என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com