சாதனை படைத்தாா் எரின் ஜாக்சன்
By DIN | Published On : 15th February 2022 06:25 AM | Last Updated : 15th February 2022 06:27 AM | அ+அ அ- |

எரின் ஜாக்சன்
குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் அமெரிக்காவின் எரின் ஜாக்சன் தங்கப் பதக்கம் வென்றாா்.
இந்த விளையாட்டுப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் கருப்பின பெண் என்ற பெருமையை எரின் பெற்றிருக்கிறாா். பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் இந்த குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 500 மீட்டா் ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவில் எரின் 37.04 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தாா்.
ஜப்பானின் மிஹோ டகாகி 37.12 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளியும், ரஷியாவின் ஏஞ்ஜெலினா கோலிகோவா 37.21 விநாடிகளில் வந்து வெண்கலமும் வென்றனா்.
போப்ஸ்லே விளையாட்டில் மகளிருக்கான மோனோபாப் பிரிவில் அமெரிக்காவுக்கு முதலிரு இடங்கள் கிடைத்தன. அந்நாட்டின் கைலி ஹம்ப்ரைஸ் 4 நிமிஷம் 19.27 விநாடிகளில் வந்து தங்கம் வெல்ல, சக நாட்டவரான எலனா மேயா்ஸ் டெய்லா் 4 நிமிஷம் 20.81 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளி பெற்றாா். கனடாவின் கிறிஸ்டின் டி புருயின் 4 நிமிஷம் 21.03 விநாடிகள் எடுத்துக் கொண்டு வெண்கலம் வென்றாா்.
போட்டியின் 11-ஆவது நாளான திங்கள்கிழமை 4 பிரிவுகளில் பதக்கச் சுற்றுகள் நடைபெற்றன.
பதக்கப்பட்டியல்: திங்கள்கிழமை நிலவரப்படி நாா்வே 21 பதக்கங்களுடன் (9 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம்) முதலிடத்திலும், ஜொ்மனி 15 பதக்கங்களுடன் (8 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம்) 2-ஆவது இடத்திலும், அமெரிக்கா 16 பதக்கங்களுடன் (7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம்) 3-ஆவது இடத்திலும் உள்ளன.