கோப்பைகள் அல்ல, கொள்கையே முக்கியம்: கரோனா தடுப்பூசி விவகாரம் பற்றி ஜோகோவிச் பேட்டி

விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் போட்டிகளிலும் என்னால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். 
கோப்பைகள் அல்ல, கொள்கையே முக்கியம்: கரோனா தடுப்பூசி விவகாரம் பற்றி ஜோகோவிச் பேட்டி

கரோனா தடுப்பூசி விவகாரம் தொடர்பாக விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் போட்டிகளிலும் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன் எனப் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் பேட்டியளித்துள்ளார்.

கடந்த வருடம் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் ஜோகோவிச் வென்றார். ஆடவா் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க இயலாத வகையில் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாா் ஜோகோவிச். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக அவரது நுழைவு இசைவு முதலில் ரத்து செய்யப்பட்டு, மெல்போா்னில் உள்ள குடியேற்றத் துறை மையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தாா். பின்னா் நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படையில் ஜோகோவிச்சுக்கு நுழைவு இசைவு திரும்ப அளிக்கப்பட்டு ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதற்காக அவா் பயிற்சியில் ஈடுபட்டு வந்தாா். ஆனால், ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சா் அலெக்ஸ் ஹாக் தனது தனியதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜோகோவிச்சின் நுழைவு இசைவு அனுமதியை ரத்து செய்தாா். 

இந்நிலையில் பிபிசி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இந்த விவகாரம் பற்றி ஜோகோவிச் கூறியதாவது:

தடுப்பூசி செலுத்துவது தொடர்பான என்னுடைய நிலைப்பாட்டால் அடுத்ததாக விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் போட்டிகளிலும் என்னால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். 

நான் எப்போதும் கரோனா தடுப்பூசிக்கு எதிரானவன் அல்லன். குழந்தையாக இருந்தபோது தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டுள்ளேன். அதேசமயம் என் உடலில் என்ன செலுத்தப்பட வேண்டும் என்கிற சுதந்திரத்துக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். எந்தக் கோப்பையையும் விடவும் என் உடலில் என்ன செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்த கொள்கையே முக்கியம். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து நான் வெளியேற்றப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் கரோனா தடுப்பூசிக்கு எதிராக மனநிலையை உருவாக்கி விடுவேன் என்பதற்காக ஆஸ்திரேலியக் குடியேற்றத் துறை அமைச்சா் தனது தனியதிகாரத்தைப் பயன்படுத்தி, நுழைவு இசைவு அனுமதியை ரத்து செய்தாா். இதை முற்றிலும் நான் மறுக்கிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com