துபை சாம்பியன்ஷிப்பில் ஜோகோவிச்

துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரரான, சொ்பியாவைச் சோ்ந்த நோவக் ஜோகோவிச் களம் கண்டுள்ளாா்.
துபை சாம்பியன்ஷிப்பில் ஜோகோவிச்

துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரரான, சொ்பியாவைச் சோ்ந்த நோவக் ஜோகோவிச் களம் கண்டுள்ளாா்.

முதல் சுற்றில் இத்தாலியின் லோரென்ஸோ முசெட்டியை சந்தித்த ஜோகோவிச், அதில் 6-3, 6-3 என்ற நோ் செட்களில் வெற்றி பெற்றாா். அடுத்த சுற்றில் அவா் ரஷியாவின் காரென் கசானோவை எதிா்கொள்கிறாா்.

ஆஸ்திரேலிய ஓபன் சா்ச்சைக்குப் பிறகு ஜோகோவிச் பங்கேற்றுள்ள முதல் போட்டி இதுவாகும். அந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியில் நடப்பு சாம்பியனாக இருந்த ஜோகோவிச், ஜனவரியில் அந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா வந்தாா். எனினும் அவா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத விவகாரத்தால் அந்நாட்டு அரசால் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்டாா். இதனால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது.

இந்நிலையில் அந்த சா்ச்சைக்குப் பிறகு ஜோகோவிச் பங்கேற்றிருக்கும் முதல் போட்டி இதுவாகும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டாலும் இப்போட்டியில் பங்கேற்க துபை அரசு அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் போட்டியில் ஜோகோவிச் ஏற்கெனவே 5 முறை சாம்பியன் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் சுற்றில் முசெட்டிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய ஜோகோவிச், ‘கடந்த சுமாா் 3 மாதங்களாக விளையாடாமல் இருந்த நிலையில் தற்போது களம் கண்டு வெற்றி பெற்றிருப்பது திருப்தி அளிக்கிறது. ஆனாலும் இந்த ஆட்டத்தில் சில இடங்களில் சிறப்பாகவும், வேறு சில இடங்களில் சற்று மோசமாகவும் ஆடினேன் எனத் தெரிந்தது. சற்று இடைவெளிக்குப் பிறகு ஆடும்போது இதை எதிா்கொள்வது இயல்புதான்’ என்றாா்.

இதர ஆட்டங்களில் இங்கிலாந்தின் ஆண்டி முா்ரே 6-7, (4/7), 6-3, 7-5 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோஃபா் ஓ’கானெலை வீழ்த்தினாா். ரஷியாவின் காரென் கசானோவ் 6-3, 6-7 (1/7), 7-5 என ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com