புத்தாண்டின் முதல் சதம் அடித்த கான்வே!
By DIN | Published On : 01st January 2022 01:30 PM | Last Updated : 01st January 2022 01:33 PM | அ+அ அ- |

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து பேட்டர் டெவான் கான்வே சதமடித்து அசத்தியுள்ளார்.
நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் பே ஓவல் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டாம் லாதம் மற்றும் வில் யங் களமிறங்கினர். லாதமை 1 ரன்னுக்கு ஆட்டமிழக்கச் செய்து ஷொரிஃபுல் இஸ்லாம் அசத்தினார். இதன்பிறகு, வில் யங் மற்றும் டெவான் கான்வே பாட்னர்ஷிப் அமைத்தனர்.
இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் அடித்து 52 ரன்கள் எடுத்த யங் ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க | டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து குவின்டன் டி காக் ஓய்வு
இதன்பிறகு, கான்வேவுடன் இணைந்து ராஸ் டெய்லர் சிறிய பாட்னர்ஷிப்பை அமைத்தார். டெய்லர் 31 ரன்கள் எடுத்து ஷொரிஃபுல் இஸ்லாம் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
எனினும், தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கான்வே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை எட்டினார். இதன்மூலம், புத்தாண்டின் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஆனால், அவர் அதைப் பெரிய சதமாக மாற்றாமல் 122 ரன்களுக்கு கேப்டன் மோமினுல் ஹக் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஹென்ரி நிகோல்ஸ் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும், முதல் நாள் ஆட்டம் நிறைவடைவேண்டிய நேரத்தில் டாம் பிளெண்ட்வெல் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளையும், எபடாட் ஹொசைன் மற்றும் மோமினுல் ஹக் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.