ஜாய், ஷன்டோ அரைசதம்: வங்கதேசம் நல்ல தொடக்கம்
By DIN | Published On : 02nd January 2022 11:48 AM | Last Updated : 02nd January 2022 11:48 AM | அ+அ அ- |

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் பே ஓவலில் நடைபெற்று வருகிறது. முதல் பேட்டிங் செய்த நியூசிலாந்து 328 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் இரண்டாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையில், 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்து 258 ரன்கள் பின்தங்கியிருந்தது.
இதையும் படிக்க | நியூசிலாந்து 328 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: வங்கதேசம் நிதானம்
இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசிப் பகுதி ஆட்டத்தை சிறப்பாக எதிர்கொண்ட மஹமதுல் ஹசன் ஜாய் மற்றும் நஜ்முல் ஹொசைன் ஷன்டோ இணை நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தது.
இருவரும் அரைசதம் அடிக்க வங்கதேசம் ஸ்கோர் உயர்ந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த இணை 104 ரன்கள் சேர்த்த நிலையில் ஷன்டோவும் (64) நீல் வேக்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, ஆட்டநேரம் முடியும் வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் ஜாயும், கேப்டன் மோமினுல் ஹக்கும் பார்த்துக்கொண்டனர்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 153 ரன்கள் பின்தங்கியுள்ளது.
ஜாய் 70 ரன்களுடனும், ஹக் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.