2-வது நாளில் 2 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா: 58 ரன்கள் முன்னிலை
By DIN | Published On : 04th January 2022 09:44 PM | Last Updated : 04th January 2022 09:44 PM | அ+அ அ- |

தென் ஆப்பிரிக்காவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் ஜோகன்னர்ஸ்பர்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க | ஷர்துல் 7 விக்கெட்டுகள்: 229 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆட்டமிழப்பு
27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. கேப்டன் கேஎல் ராகுல் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், மார்கோ ஜான்சென் பந்தில் ஆட்டமிழந்தார். பவுண்டரிகளாக அடித்து விளையாடி வந்த மயங்க் அகர்வால் 23 ரன்களுக்கு டுவன் ஆலிவியர் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, சேத்தேஷ்வர் புஜாரா சற்று மாறுதலாக அதிரடி காட்டி விளையாடினார். இதனால், ரன் வேகம் உயர்ந்தது.
2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
புஜாரா 42 பந்துகளில் 35 ரன்களுடனும், அஜின்க்யா ரஹானே 22 பந்துகளில் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.