176.2 ஓவர்கள்: நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்த வங்கதேச பேட்டர்கள்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி தொடர்ந்து பல ஆச்சர்யங்களை அளித்துக் கொண்டிருக்கிறது.
மோமினுல் ஹஹ்
மோமினுல் ஹஹ்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி தொடர்ந்து பல ஆச்சர்யங்களை அளித்துக் கொண்டிருக்கிறது.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 4-வது நாள் முடிவில் 17 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேச அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது.

முதல் டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 328 ரன்கள் எடுத்தது.

3-ம் நாள் முடிவில் வங்கதேச அணி, 156 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் 73 ரன்கள் முன்னிலை பெற்றது. யாஷிர் அலி 11, மெஹிதி ஹசன் மிராஸ் 20 ரன்கள் எடுத்துக் களத்தில் இருந்தார்கள். வங்கதேச அணியில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 78 ரன்கள், ஷாண்டோ 64 ரன்கள், கேப்டன் மோமினுல் ஹஹ் 88 ரன்கள், விக்கெட் கீப்பர் லிடன் தாஸ் 86 ரன்கள் எடுத்தார்கள்.

500 ரன்களை எடுத்து நியூசிலாந்து அணிக்கு மேலும் நெருக்கடி தரும் என எதிர்பார்க்கப்பட்ட வங்கதேச அணி 4-வது நாளில் 176.2 ஓவர்களில் 458 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் முன்னிலை பெற்றது வங்கதேச அணி. நியூசி. தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும் நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இதன்பிறகு விளையாடிய நியூசிலாந்து அணி 4-ம் நாள் முடிவில் 63 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. கடைசி 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது வங்கதேச அணி. டெய்லர் 37, ரச்சின் ரவீந்திரா 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். எபடாட் ஹுசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 17 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கடைசி நாளில் நியூசிலாந்தை 200, 250 ரன்களுக்குள் வீழ்த்தினால் வங்கதேச அணிக்கு மகத்தான வெற்றி அமையும். அல்லது நியூசிலாந்து அணி கடைசி நாளில் வங்கதேச அணியை எதிர்பாராதவிதமாக துவம்சம் செய்யப் போகிறதா? பரபரப்பான 5-ம் நாளின் முடிவை அறிந்துகொள்ள காத்திருக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். 

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 176 ஓவர்களுக்கும் அதிகமாக விளையாடி வெற்றிக்கான தனது முயற்சியை வெளிப்படுத்தியுள்ளது. இத்தனை ஓவர்களுக்கு நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் மைதானத்தில் இருக்கவேண்டியிருந்ததால் அவர்களிடம் சோர்வு தென்பட்டது. இந்தளவுக்கு வங்கதேச அணி நியூசிலாந்து மண்ணில் பேட்டிங் திறமையை வெளிப்படுத்தும் என யாரும் எண்ணவில்லை. இதனால் இந்த முயற்சியின் முடிவில் சில சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. 

176.2 ஓவர்கள் - வங்கதேச அணி அதிக ஓவர்கள் விளையாடிய டெஸ்டுகளில் இதற்கு 2-ம் இடம். 20130ல் கேலேவில் இலங்கைக்கு எதிராக 196 ஓவர்கள் விளையாடியது வங்கதேச அணி. ஆசியாவுக்கு வெளியே 2-வது முறையாக 150க்கும் அதிகமான ஓவர்களில் விளையாடியுள்ளது. இதற்கு முன்பு 2017-ல் வெல்லிங்டனில் 152 ஓவர்களுக்கு விளையாடியது. 

2009 - நியூசிலாந்தில் அதிக ஓவர்களுக்கு டெஸ்டில் விளையாடிய அணி பாகிஸ்தான். 193.2 ஓவர்கள் வரை விளையாடியுள்ளது. அதற்குப் பிறகு இப்போது ஒரு வெளிநாட்டு அணி அதிக ஓவர்களுக்கு நியூசிலாந்தில் விளையாடியுள்ளது. 

130 ரன்கள் முன்னிலை - 2017-க்குப் பிறகு இப்போது தான் சொந்த மண்ணில் எதிரணிக்கு அதிக ரன்கள் முன்னிலை தந்துள்ளது நியூசிலாந்து. 

50 பந்துகள் - வங்கதேச அணியின் முதல் 8 பேட்டர்களும் குறைந்தது 50 பந்துகளையாவது எதிர்கொண்டுள்ளார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு இதுவே முதல்முறை. 

400+ ரன்கள் - 2010-க்குப் பிறகு நியூசிலாந்தில் அதிக முறை 400 ரன்கள் எடுத்த அணிகளில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் நாடுகளுக்கு முதலிடம். இரு அணிகளும் அதிகபட்சமாக 4 முறை அந்த ஸ்கோரை எடுத்துள்ளன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com