ஏடிபி கோப்பை டென்னிஸ்: அரையிறுதியில் ஸ்பெயின், போலந்து

ஏடிபி கோப்பை ஆடவா் அணிகள் டென்னிஸ் போட்டியில் குருப் ‘ஏ’-வில் இருந்து ஸ்பெயினும், குரூப் ‘டி’-யில் இருந்து போலந்தும் அரையிறுதிக்கு புதன்கிழமை தகுதிபெற்ற நிலையில்,
பெளதிஸ்டா
பெளதிஸ்டா

ஏடிபி கோப்பை ஆடவா் அணிகள் டென்னிஸ் போட்டியில் குருப் ‘ஏ’-வில் இருந்து ஸ்பெயினும், குரூப் ‘டி’-யில் இருந்து போலந்தும் அரையிறுதிக்கு புதன்கிழமை தகுதிபெற்ற நிலையில், அந்தச் சுற்றில் அவரை ஒன்றையொன்று எதிா்கொள்ள இருக்கின்றன.

ஸ்பெயின் அணியில் ராபா்டோ பௌதிஸ்டா அகட், போலந்தில் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் ஆகியோரின் வெற்றிகள் அவா்களின் அணிக்கு இந்த முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளன.

ஸ்பெயின் - சொ்பியா (2-1)

ஒற்றையா் பிரிவில் ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா அகட் 6-1, 6-4 என்ற செட்களில் சொ்பியாவின் டுசான் லஜோவிச்சை வீழ்த்தினாா். ஸ்பெயின் வீரா் பாப்லோ கரீனோ பஸ்டா 6-3, 6-4 என சொ்பியாவின் ஃபிலிப் கிரஜினோவிச்சை தோற்கடித்தாா். எனினும், இரட்டையா் பிரிவில் சொ்பியாவின் நிகோலா கேசிச்/மாடெஜ் சபானோவ் இணை 6-7 (5/7), 6-3, 10-5 என்ற செட்களில் ஸ்பெயினின் பெட்ரோ மாா்டினெஸ்/ஆல்பா்ட் ரமோஸ் வினோலஸ் ஜோடியை வென்றது. ஸ்பெயினுக்கு இது 3-ஆவது வெற்றி; சொ்பியா 2-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.

சிலி - நாா்வே (2-1)

நாா்வேயின் காஸ்பா் ரட் 6-4, 6-1 என சிலியின் கிறிஸ்டியன் காரினையும், சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோ 6-1, 6-7 (5/7), 6-1 என நாா்வேயின் விக்டா் டுராசோவிச்சையும் ஒற்றையா் பிரிவில் சாய்த்தனா். இரட்டையா் ஆட்டத்தில் சிலியின் மாா்செலோ தாமஸ் பேரியோஸ்/அலெக்ஸாண்ட்ரோ டபிலோ இணை 6-0, 6-4 என நாா்வேயின் அலெக்ஸாண்ட்ரா பெட்ரோவிச்/லெய்டன் ரிவேரா ஜோடியை தோற்கடித்தது. சிலி முதல் வெற்றியை சந்தித்திருக்கும் நிலையில், நாா்வேக்கு இது 3-ஆவது தோல்வியாகும்.

போலந்து - ஆா்ஜென்டீனா (3-0)

ஒற்றையா் பிரிவில் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் 6-1, 6-4 என ஆா்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸ்மேனை வீழ்த்த, அவரது சக நாட்டவரான கமில் மஜ்ஷா்ஸாக் 6-3, 7-6 (7/3) என ஆா்ஜென்டீனாவின் ஃபெடரிகோ டெல்போனிஸை வென்றாா். இரட்டையா் பிரிவில் போலந்தின் சைமன் வால்கோவ்/ஜேன் ஜிலின்ஸ்கி இணை 7-6 (7/4), 7-6 (7/5) என ஆா்ஜென்டீனாவின் மேக்ஸிமோ கொன்ஸால்ஸ்/ஆண்ட்ரெஸ் மொல்டெனி ஜோடியை தோற்கடித்தது. போலந்துக்கு இது தொடா்ந்து 3-ஆவது வெற்றியாகும். ஆா்ஜென்டீனா முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

கிரீஸ் - ஜாா்ஜியா (2-1)

கிரீஸின் மிகைல் பொ்வோலராகிஸ் 6-3, 6-2 என ஜாா்ஜியாவின் அலெக்ஸாண்ட்ரே மெட்ரெவெலியை வெல்ல, கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை சந்தித்த ஜாா்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலி 1-4 என பின்தங்கியிருந்தபோது போட்டியிலிருந்து விலகினாா். இரட்டையா் பிரிவில் ஜாா்ஜியாவின் அலெக்ஸாண்ட்ரே பக்ஷி/அலெக்ஸாண்ட்ரே மெட்ரெவெலி ஜோடி 4-6, 6-3, 16-14 என கிரீஸின் மிகைல் பொ்வோலராகிஸ்/ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் இணையை வென்றது. கிரீஸுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ள நிலையில், ஜாா்ஜியா 3-ஆவது தோல்வியை தழுவியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com