4-ம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம்: தமிழ்நாடு வெதர்மேனின் தெ.ஆ. மழைத் தகவல்

2-வது டெஸ்டின் 4-ம் நாள் ஆட்டம் முழுக்க மழையால் பாதிக்கப்படலாம் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
4-ம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம்: தமிழ்நாடு வெதர்மேனின் தெ.ஆ. மழைத் தகவல்

ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டின் 4-ம் நாள் ஆட்டம் முழுக்க மழையால் பாதிக்கப்படலாம் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெறும் 2-வது டெஸ்டில் மழை காரணமாக 4-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் ஜொகன்னஸ்பர்க்கில் திங்கள் அன்று தொடங்கியது.

இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக இந்த டெஸ்டிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதனால் கே.எல். ராகுல் கேப்டனாகக் களம் இறங்கினார். டாஸ் வென்ற ராகுல், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி தேர்வானார். தெ.ஆ. அணியில் ஓய்வு பெற்ற டி காக்குக்குப் பதிலாக கைல் வெரீனும் முல்டருக்குப் பதிலாக ஆலிவியரும் தேர்வானார்கள்.  

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராகுல் 50, அஸ்வின் 46 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் ஜேன்சன் 4 விக்கெட்டுகளும் ரபாடா, ஆலிவியர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்தது. பீட்டர்சன் 62, பவுமா 51 ரன்கள் எடுத்தார்கள். ஷர்துல் தாக்குர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 60.1 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. விஹாரி ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். ரஹானே 58, புஜாரா 53 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் ரபாடா, என்கிடி, ஜான்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 2-வது டெஸ்டில் தெ.ஆ. அணி வெற்றி பெற 240 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

தென்னாப்பிரிக்க அணி 3-ம் நாள் முடிவில் தனது 2-வது இன்னிங்ஸில் 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. எல்கர் 46, வான் டர் டுசென் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த பரபரப்பான 4-ம் நாள் ஆட்டம் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதியம் 12 மணி வரை அங்கு மழை பெய்து வருவதால் 4-ம் நாள் ஆட்டம் தொடங்கவில்லை. மழை நின்றால் உணவு இடைவேளைக்குப் பிறகு 2-ம் பகுதியில்  ஆட்டம் தொடங்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்), ஜொஹன்னஸ்பர்க் மழை நிலவரம் பற்றி  ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது. இன்று 2-ம் பகுதி ஆட்டமும் நடைபெறாமல் போகலாம். 3-வது பகுதியிலும் ஆட்டம் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு. அதுவும் கடினம் என்றுதான் தெரிகிறது. எனவே 4-ம் நாள் ஆட்டம் முழுக்க மழையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com