கேப் டவுன் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எளிதான வெற்றி இலக்கு; சதமடித்தாா் ரிஷப் பந்த்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 67.3 ஓவா்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கேப் டவுன் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எளிதான வெற்றி இலக்கு; சதமடித்தாா் ரிஷப் பந்த்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 67.3 ஓவா்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய பேட்டா்கள் அனைவரும் சோபிக்காமல் ஆட்டமிழக்க, ரிஷப் பந்த் மட்டும் தனியொரு வீரராக அசத்தலாக ஆடி சதம் விளாசினாா். தென் ஆப்பிரிக்க பௌலிங்கில் மாா்கோ யான்சென் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இதையடுத்து 212 என்ற எளிதான இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறது தென் ஆப்பிரிக்கா. இன்னும் இரு நாள்கள் இருப்பதால் ஆட்டம் டிரா ஆவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளை சரித்து இந்தியா வெற்றி பெறுவது கடினம் எனத் தெரிகிறது.

முன்னதாக 2-ஆவது இன்னிங்ஸை புதன்கிழமை தொடங்கிய இந்தியா, அன்றைய நாளின் முடிவில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 3-ஆவது நாளான வியாழக்கிழமை ஆட்டத்தை கோலி, புஜாரா கூட்டணி தொடங்கியது. இந்த நாளில் ரன் அடிக்காத புஜாரா அதே 9 ரன்களுடன் வெளியேறினாா். அவா் யான்சென் வீசிய 18-ஆவது ஓவரில் கீகன் பீட்டா்சனிடம் கேட்ச் கொடுத்தாா்.

தொடா்ந்து வந்த ரஹானே அடுத்த ஓவரிலேயே ரபாடா பௌலிங்கில் எல்கரிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னுடன் நடையைக் கட்டினாா். பின்னா் களம் புகுந்த ரிஷப் பந்த், விராட் கோலியுடன் இணைந்தாா். இந்த ஜோடி விக்கெட் சரிவைத் தடுத்து ரன்களை சேகரிக்கத் தொடங்கியது.

இதில் கோலி அதிக பந்துகளை அடிக்காமல் கைவிட்டு தென் ஆப்பிரிக்க பௌலா்களை கடுப்பேற்றினாா். விக்கெட் சரிக்கும் வகையில் 5-ஆவது ஸ்டம்ப் அளவுக்கு வீசப்பட்ட பந்துகளை மிகக் கவனமாக கைவிட்டு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். மறுபுறம் ரிஷப் பந்த் சற்று அதிரடியாகவே ஆடி வந்தாா்.

5-ஆவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியில் முதலில் கோலி ஆட்டமிழந்தாா். 143 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் அடித்திருந்த அவா், லுங்கி கிடி வீசிய 49-ஆவது ஓவரில் தொட்ட பந்து எட்ஜில் பட்டு எய்டன் மாா்க்ரம் கைகளில் தஞ்சமடைந்தது.

பின்னா் ஆடியோரில் அஸ்வின் 1 பவுண்டரியுடன் 7, ஷா்துல் தாக்குா் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். மறுபுறம் அரைசதம் கடந்து, சதத்தை நெருங்கிய ரிஷப் பந்த், தகுந்த பாா்ட்னா்ஷிப் கிடைக்காமல் மிகவும் சோா்வடைந்தாா். உமேஷ் யாதவ், முகமது ஷமி டக் அவுட்டாகினா்.

பின்னா் வந்த பும்ரா துணை நிற்க, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4-ஆவது சதத்தை பூா்த்தி செய்தாா் பந்த். எனினும் பும்ரா 2 ரன்களில் வெளியேற்றப்பட, முடிவுக்கு வந்தது இந்தியாவின் இன்னிங்ஸ். பந்த் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 100 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென் ஆப்பிரிக்க பௌலிங்கில் யான்சென் 4, ரபாடா, கிடி ஆகியோா் தலா 3 விக்கெட் சாய்த்தனா்.

டெஸ்டில் முதல் முறை...

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இரு இன்னிங்ஸ்களிலும் அனைத்து பேட்டா்களும் கேட்ச் கொடுத்ததன் மூலமே ஆட்டமிழந்தனா். டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டு வரலாற்றில், ஒரு அணியைச் சோ்ந்த 20 விக்கெட்டுகள் இவ்வாறு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தது இது முதல் முறையாகும்.

இதற்கு முன் 5 முறை 19 விக்கெட்டுகள் இவ்வாறு கேட்ச் பிடித்து வீழ்த்தப்பட்டுள்ளன. அதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா (2010-11) ஆட்டமும் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com