100 ரன்கள் கூட்டணி: இந்திய அணியின் சரிவைத் தடுத்து நிறுத்திய ரிஷப் பந்த் & ராகுல்

ரிஷப் பந்த், ராகுல் அரை சதமெடுத்தார்கள்...
ராகுல்
ராகுல்

தென்னாப்பிரிகாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியது தென்னாப்பிரிக்க அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

பாா்ல் நகரில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. தெ.ஆ. அணியில் மார்கோ ஆன்சென்னுக்குப் பதிலாக மகாலா இடம்பெற்றார். 

11 ஓவர்கள் வரை இந்திய அணியின் தொடக்க வீரர்களான கே.எல். ராகுலும் ஷிகர் தவனும் நன்கு விளையாடி 58 ரன்கள் சேர்த்தார்கள். 12-வது ஓவரில் மார்க்ரம் பந்தில் வேகமாக ஷாட் அடித்த ஷிகர் தவன், பவுண்டரி அருகே கேட்ச் கொடுத்து 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிறகு வந்த விராட் கோலி, 5 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் மஹாராஜா பந்தில் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். 2020-க்குப் பிறகு முதல்முறையாக டக் அவுட் ஆகியுள்ளார் விராட் கோலி. 

இந்திய அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது. அப்போது ஒரு அருமையான ரன் அவுட் வாய்ப்பு வீணடிக்கப்பட்டது. ரன் எடுக்க முயலும்போது தவறு செய்ததால் பந்த், ராகுல் என இருவருமே ஒரே முனையில் இருந்தார்கள். அப்போதும் ரன் அவுட் செய்ய முடியாமல் தடுமாறி நல்ல வாய்ப்பை வீணாக்கியது தென்னாப்பிரிக்க அணி. இந்த நேரத்தில் இன்னொரு விக்கெட் விழுந்தால் என்ன ஆகுமா என இந்திய ரசிகர்கள் கவலைப்பட்டார்கள். ஆனால் ரிஷப் பந்த், ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ராகுல் நிதானமாக ஆடியபோது இவர் அடிக்கடி பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் 56 பந்துகளில் 50 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். 43 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார் ரிஷப் பந்த். 

28.2 ஓவர்களில் 164/2 என ஸ்கோர் இருந்தபோது 94 பந்துகளில் 100 ரன்கள் கூட்டணியைப் பூர்த்தி செய்தார்கள் ரிஷப் பந்தும் கே.எல். ராகுலும். 

71 பந்துகளில் அரை சதம் எடுத்தார் கே.எல். ராகுல். 8, 46 ரன்களில் இருந்தபோது ராகுல் வழங்கிய கேட்ச்சைக் கோட்டை விட்டார்கள் தெ.ஆ. ஃபீல்டர்கள்.

இந்திய அணி 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் 77, ராகுல் 53 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com