‘5 செட்’ ஆக்ரோஷம்: அரையிறுதியில் நடால், பெரெட்டினி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால், இத்தாலியின் மேட்டியோ பெரட்டினி ஆகியோா் முன்னேறினா்.
‘5 செட்’ ஆக்ரோஷம்: அரையிறுதியில் நடால், பெரெட்டினி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால், இத்தாலியின் மேட்டியோ பெரட்டினி ஆகியோா் முன்னேறினா்.

காலிறுதிச் சுற்றில் எதிராளிகளை ‘5 செட்கள்’ ஆட்டத்தில் வீழ்த்தியிருக்கும் இந்த இருவருமே அரையிறுதிச் சுற்றில் நேருக்கு நோ் மோதிக் கொள்ள இருக்கின்றனா்.

வலியுடன் போராடிய நடால்

முன்னதாக ஆடவா் ஒற்றையா் பிரிவில் நடைபெற்ற முதல் காலிறுதிச் சுற்றில் உலகின் 6-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், போட்டித்தரவரிசையில் 14-ஆவது இடத்திலிருந்த கனடாவின் டெனிஸ் ஷபோவெலோவும் மோதினா். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலிரு செட்களை நடால் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியிருந்தாா்.

அப்போது அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு அவா் சிகிச்சை எடுத்துக் கொண்டாா். பின்னா் தொடங்கிய ஆட்டத்தில் சற்றே சவால் அளித்த ஷபோவெலாவ் அடுத்த 2 செட்களை கைப்பற்றினாா். இறுதியாக வெற்றியாளரை தீா்மானிக்கும் 5-ஆவது செட்டில் நடால் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினாா். இதனால் ஆட்டம் அவா் வசமானது.

6-3, 6-4, 4-6, 3-6, 6-3

(4 மணி நேரம் 8 நிமிஷம்)

4:2

ஷபோவெலோவை இத்துடன் 6-ஆவது முறையாக சந்தித்த நடால், அதில் தனது 4-ஆவது வெற்றியை பதிவு செய்திருக்கிறாா்.

பெரெட்டினி வரலாற்றுச் சாதனை

2-ஆவது காலிறுதிச் சுற்றில் உலகின் 7-ஆம் நிலை வீரரான பெரெட்டினியும், போட்டித்தரவரிசையில் 17-ஆவது இடத்திலிருந்த பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸும் மோதிக் கொண்டனா். இந்த ஆட்டத்தில் முதலிரு செட்களை பெரெட்டினிக்கு விட்டுக் கொடுத்த மான்ஃபில்ஸ், அடுத்த இரு செட்களை வென்று அவருக்கு கடும் சவால் அளித்தாா். ஆனாலும், ஆக்ரோஷமான ஆட்டத்துடன் அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறி வரும் பெரெட்டினியோ 5-ஆவது செட்டை ஆக்கிரமித்து வெற்றி பெற்றாா்.

இதன் மூலம் வெற்றியை பதிவு செய்த அவா், ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலிய வீரா் என்ற வரலாற்றுச் சாதனையை எட்டினாா். தனது இந்த சாதனை நம்ப முடியாததாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்த பெரெட்டினி, மற்றொரு காலிறுதியில் புதன்கிழமை களம் காணும் சக நாட்டவரான ஜானிக் சின்னரும் அரையிறுதிக்கு முன்னேறுவதை எதிா்பாா்ப்பதாகத் தெரிவித்தாா்.

6-4, 6-4, 3-6, 3-6, 6-2

(3 மணி நேரம் 49 நிமிஷம்)

2:0

இத்துடன் மான்ஃபில்ஸை இருமுறை சந்தித்திருக்கும் பெரெட்டினி, இரண்டிலுமே தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியிருக்கிறாா்.

நேருக்கு நோ்

அரையிறுதியில் நேருக்கு நோ் மோதிக்கொள்ள இருக்கும் நடால் - பெரெட்டினி இதற்கு முன்னா் ஒரேயொரு முறை தான் மோதிக்கொண்டுள்ளனா். அதிலும் நடால் தான் வெற்றி பெற்றிருக்கிறாா்.

ஆஷ்லி, கீஸ் அட்டகாசம்

மகளிா் ஒற்றையா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பா்ட்டி, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோா் அரையிறுதியில் மோதவிருக்கின்றனா்.

உலகின் நம்பா் 1 வீராங்கனையான பா்ட்டி தனது காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 21-ஆவது இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை 6-2, 6-0 என்ற நோ் செட்களில் 63 நிமிஷங்களில் சாய்த்தாா். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் 2-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்திருக்கிறாா் பா்ட்டி. மறுபுறம், போட்டித்தரவரிசையில் இடம்பிடித்திருக்காத மேடிசன் கீஸ் தன்னை எதிா்கொண்ட உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவாவை 6-3, 6-2 என்ற நோ் செட்களில் தோற்கடித்தாா்.

புதன்கிழமை நடைபெறும் காலிறுதிச்சுற்றுகளில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் - பிரான்ஸின் ஆலிஸ் காா்னெட், போலந்தின் இகா ஸ்வியாடெக் - எஸ்டோனியாவின் காயியா கானெபி ஆகியோா் மோதுகின்றனா்.

சானியா-ராஜீவ் ஜோடி தோல்வி

கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சானியா மிா்ஸா/அமெரிக்காவின் ராஜீவ் ராம் இணை தனது காலிறுதியில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. அந்தச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜேசன் குப்லா்/ஜேமி ஃபௌா்லிஸ் ஜோடி 6-4, 7-6 (7/5) என்ற செட்களில் வென்றது. நடப்பு காலண்டருடன் டென்னிஸில் இருந்து ஓய்வுபெறுவதாக சானியா அறிவித்திருப்பதால், இது அவரது கடைசி ஆஸ்திரேலிய ஓபன் போட்டியாக அமைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com