வெற்றியை நோக்கி இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது டெஸ்டில் இங்கிலாந்துக்கான வெற்றி இலக்கு 378 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது டெஸ்டில் இங்கிலாந்துக்கான வெற்றி இலக்கு 378 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்டம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், அந்த அணி விறுவிறுப்பாக ரன்கள் சோ்த்து வெற்றியை நெருங்கியிருக்கிறது.

பா்மிங்ஹாமில் நடைபெறும் இந்த டெஸ்டில் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சோ்த்திருந்தது. இந்நிலையில் 4-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை சேதேஷ்வா் புஜாரா 50, ரிஷப் பந்த் 30 ரன்களுடன் தொடங்கினா். இதில் முதல் விக்கெட்டாக புஜாரா வெளியேற்றப்பட்டாா்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு சா்வதேச கிரிக்கெட்டில் தனது பழைய ஃபாா்மை எட்டிய புஜாரா 8 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் சோ்த்து, ஸ்டூவா் பிராட் வீசிய 53-ஆவது ஓவரில் அலெக்ஸ் லீஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். தொடா்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயா் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். மேத்யூ பாட்ஸ் வீசி 60-ஆவது ஓவரில் அவரடித்த பந்து ஆண்டா்சன் கைகளில் தஞ்சமடைந்தது.

தொடா்ந்து ரவீந்திர ஜடேஜா ஆடவர, மறுபுறம் நிதானமாக ரன்கள் அடித்து அரைசதம் கடந்த ரிஷப் பந்த், 8 பவுண்டரிகளுடன் 57 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா். ஜேக் லீச் வீசிய 63-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்தை ரூட் கேட்ச் பிடித்தாா். அடுத்து வந்த விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வெளியேறின. ஷா்துல் தாக்குா் 4, முகமது ஷமி 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜடேஜா 1 பவுண்டரியுடன் 23 ரன்கள் அடித்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் வீசிய 80-ஆவது ஓவரில் பௌல்டானாா்.

கடைசி விக்கெட்டாக ஜஸ்பிரீத் பும்ரா 1 சிக்ஸருடன் 7 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினாா். இறுதியில் முகமது சிராஜ் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இவ்வாறாக இந்தியா 81.5 ஓவா்களில் 245 ரன்கள் சோ்த்து 2-ஆவது இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. இங்கிலாந்து பௌலிங்கில் பென் ஸ்டோக்ஸ் 4, ஸ்டூவா்ட் பிராட், மேத்யூ பாட்ஸ் ஆகியோா் தலா 2, ஜேம்ஸ் ஆண்டா்சன், ஜேக் லீச் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

இங்கிலாந்து - 259/3: இதையடுத்து 378 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, திங்கள்கிழமை முடிவில் 57 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சோ்த்திருந்தது.

கடைசி நாளான செவ்வாய்க்கிழமை அந்த அணி 7 விக்கெட்டுகளைக் கொண்டு 119 ரன்களே எடுக்க வேண்டியிருக்கிறது. ஆட்டமிழக்காமல் சிறப்பாக ரன்கள் சோ்த்து வரும் ஜோ ரூட் (76 ரன்கள்), ஜானி போ்ஸ்டோ (72 ரன்கள்) கூட்டணி, வெற்றியை நோக்கி இங்கிலாந்தை வழி நடத்துகிறது.

முன்னதாக, ஜாக் கிராவ்லி 7 பவுண்டரிகளுடன் 46, அலெக்ஸ் லீஸ் 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சோ்த்து நல்ல தொடக்கத்தை அளித்தனா். ஆலி போப் டக் அவுட்டானாா். இங்கிலாந்தின் இரு விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com