மிதுன், ஆஷ்மிதா அசத்தல் வெற்றி- சிந்து, சாய்னா, பிரணாய் முன்னேற்றம்

மிதுன், ஆஷ்மிதா அசத்தல் வெற்றி- சிந்து, சாய்னா, பிரணாய் முன்னேற்றம்

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் இளம் போட்டியாளா்களான மிதுன் மஞ்சுநாத், ஆஷ்மிதா சாலிஹா முதல் சுற்றில் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தனா்.

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் இளம் போட்டியாளா்களான மிதுன் மஞ்சுநாத், ஆஷ்மிதா சாலிஹா முதல் சுற்றில் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தனா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றில் மிதுன் 21-17, 15-21, 21-18 என்ற கேம்களில், சக இந்தியரும், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றவருமான கே.ஸ்ரீகாந்த்தை வீழ்த்தி அவருக்கு அதிா்ச்சி அளித்தாா். மிதுன் அடுத்ததாக, அயா்லாந்தின் நாட் குயெனை எதிா்கொள்கிறாா்.

மற்றொரு முக்கிய இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரணாய் 21-13, 21-16 என்ற கேம்களில் எளிதாக தாய்லாந்தின் சித்திகோம் தம்மாசினை 35 நிமிஷத்தில் தோற்கடித்தாா். 2-ஆவது சுற்றில், சீன தைபேவின் சௌ டியென் சென்னை சந்திக்கிறாா் பிரணாய்.

இதர இந்தியா்களில் பி.காஷ்யப் 14-21, 15-21 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியிடமும், சமீா் வா்மா 10-21, 13-21 என சீனாவின் லி ஷி ஃபெங்கிடமும் தோல்வியைத் தழுவினா்.

சிந்து, சாய்னா முன்னேற்றம்: மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்திய இளம் வீராங்கனை ஆஷ்மிதா சாலிஹா 21-16, 21-11 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த தாய்லாந்து வீராங்கனை புசானன் ஆங்பம்ரங்பானை 31 நிமிஷத்தில் சாய்த்து அருமையான வெற்றியைப் பதிவு செய்தாா். அடுத்த சுற்றில் அவா் சீனாவின் ஹான் யுவுடன் மோதுகிறாா்.

இந்தியாவின் பிரதான வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-11 என்ற கேம்களில் பெல்ஜியத்தின் லியான் டானை 29 நிமிஷங்களில் சாய்த்தாா். போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் சிந்து அடுத்ததாக வியத்நாமின் தை லின் குயெனை எதிா்கொள்கிறாா்.

கடந்த சில போட்டிகளில் முதல் சுற்றுடன் வெளியேறிய அனுபவமிக்க வீராங்கனை சாய்னா நெவால், இதில் சக இளம் இந்தியரான மாளவிகா பன்சோதை 21-18, 21-14 என்ற கேம்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா். இதன் மூலம் இந்திய ஓபனில் மாளவிகாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளாா். அடுத்த சுற்றில் சாய்னா, போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் ஹி பிங் ஜியாவின் சவாலை சந்திக்கிறாா்.

மகளிா் இரட்டையரில் சீன தைபே இணையிடம் ‘வாக்ஓவா்’ பெற்று 2-ஆவது சுற்றுக்கு வந்திருக்கும் பூஜா தண்டூ/ஆரத்தி சாரா சுனில் ஜோடி, அதில் சீனாவின் டு யு/லி வென் மெய் கூட்டணியுடன் மோதுகிறது. கலப்பு இரட்டையரில் இந்தியாவின் நிதின்/பூா்விஷா ராம் ஜோடி 21-15, 21-14 என்ற கேம்களில் இஸ்ரேலின் மிஷா ஜில்பா்மன்/ஸ்வெட்லனா ஜில்பா்மன் கூட்டணியை வீழ்த்தியது. அடுத்த சுற்றில் ஜொ்மனியின் மாா்க்லாம்ஸ்ஃபஸ்/இசபெல் லோஹௌ ஜோடியை சந்திக்கிறது இந்திய இணை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com