விராட் கோலியின் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விராட் கோலியின் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மோசமான ஃபார்மில் உள்ளார். இதனால் அவருக்கு எதிராக அவ்வப்போது அவரது பேட்டிங் குறித்து விமர்சனங்கள் எழுந்த வண்ணமே இருந்தன. உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் விளையாடி வருகிறது. அதில் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத விராட் கோலிக்கு இந்த இங்கிலாந்து தொடர் ஒரு வாய்ப்பாக அமையும் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. விராட் கோலி விளையாடிய 2 டி20 போட்டிகளையும் சேர்த்து அவர் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி அணியில் இடம் பெறவில்லை. 2-வது ஒரு நாள் போட்டியில் அவருக்கு அணியில் இடம் கிடைத்தது. இருப்பினும், அவர் 16 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமளித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலிக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “இதுவும் கடந்து போகும். தைரியமாக இருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். அவர் இந்தப் பதிவினை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே விராட் கோலியின் ரசிகர்கள் பாபர் அசாமின் இந்த செயலை வெகுவாகப் பாராட்டினர்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு பேசிய பாபர் அசாமிடம் விராட் கோலி குறித்த ட்விட் குறித்து கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த பாபர் அசாம் கூறியதாவது: “ ஒரு கிரிக்கெட் வீரராக எனக்கு நன்றாக தெரியும் ஒவ்வொரு வீரரும் இது போன்ற காலக் கட்டத்தை கடந்து வர வேண்டியிருக்கும். அந்த மாதிரியான தருணத்தில் அந்த வீரருக்கு உங்களது ஆதரவை அளிக்க வேண்டும். அதை நினைத்தே என்னுடைய ஆதரவை அவருக்கு அளிப்பதற்காக அந்த ட்விட் பதிவை வெளியிட்டேன்.

அவர் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தக் கூடியவர். இதிலிருந்து எப்படி வெளியே வர வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதற்கு சிறிது காலம் பிடிக்கும். அதுவரை அவருக்கு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

விராட் கோலி கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தன்னுடைய சர்வதேச போட்டிகளில் கடைசியாக சதம் அடித்திருந்தார். அதன்பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com