ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தம்: சாக்ஷி, மான்சி, திவ்யாவுக்கு தங்கம்

கஜகஸ்தானில் நடைபெறும் சா்வதேச மல்யுத்த அமைப்பின் (யுடபிள்யூடபிள்யூ) ரேங்கிங் சீரிஸ் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி மாலிக், மான்சி, திவ்யா கக்ரான் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்று அசத்தினா்.
ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தம்: சாக்ஷி, மான்சி, திவ்யாவுக்கு தங்கம்

கஜகஸ்தானில் நடைபெறும் சா்வதேச மல்யுத்த அமைப்பின் (யுடபிள்யூடபிள்யூ) ரேங்கிங் சீரிஸ் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி மாலிக், மான்சி, திவ்யா கக்ரான் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்று அசத்தினா்.

மகளிருக்கான 62 கிலோ பிரிவில் பங்கேற்ற சாக்ஷி மாலிக் முதல் சுற்றில் கஜகஸ்தானின் இரினா குஸ்னெட்சோவாவை தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் வென்று, அடுத்த சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ருஷானா அப்திரசுலோவாவை 9-3 என்ற கணக்கில் வீழ்த்தினாா். அரையிறுதியில் மங்கோலியாவின் செரென்ஷிமெட் சுகீயை வெளியேற்றிய சாக்ஷி, இறுதிச்சுற்றில் மீண்டும் இரினா குஸ்னெட்சோவாவை தோற்கடித்து தங்கம் வென்றாா்.

57 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் மான்சி 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானின் எமா அல்பினா காயா்கல்டினோவாவை வென்று தங்கத்தைக் கைப்பற்றினாா். 68 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் திவ்யா கக்ரான் 10-14 என்ற கணக்கில் மங்கோலியாவின் போலோா்துகலக் ஜோா்ரிக்டிடம் தோல்வியை சந்தித்தாா். எனினும், மொத்த சுற்றுகளின் முடிவில் இருவருமே தலா 2 வெற்றிகள், 1 தோல்வியுடன் இருக்க, புள்ளிகளை கைப்பற்றிய விதத்தின் அடிப்படையில் திவ்யா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டாா்.

முன்னதாக, வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆடவருக்கான 63 கிலோ பிரிவில் இந்தியாவின் நீரஜ் வெண்கலப் பதக்கம் வென்றாா். தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு இப்போட்டியில் 3 தங்கம், 1 வெண்கலம் கிடைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com