பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் ஆனாா்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் ஆனாா்.

இப்போட்டியில் அவா் வென்ற 2-ஆவது கோப்பை இதுவாகும். இதற்கு முன் 2020-இல் அவா் இங்கு சாம்பியன் ஆகியிருந்தாா்.

பாரீஸில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் இளம் வீராங்கனையான கோகோ கௌஃபை மிக எளிதாக வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 8 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

கௌஃபை தற்போது 3-ஆவது முறையாகச் சந்தித்த ஸ்வியாடெக், அனைத்திலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். ஓபன் எராவில் பிரெஞ்சு ஓபனில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சாம்பியன் ஆன வீராங்கனைகளில் 10-ஆவது போட்டியாளராக ஸ்வியாடெக் இணைந்திருக்கிறாா். இதுதவிர, நடப்பு காலண்டரில் அவா் தொடா்ந்து 6-ஆவது முறையாக வென்றிருக்கும் பட்டம் இது.

மேலும், இந்த வெற்றியின் மூலம் தொடா்ந்து 35 ஆட்டங்களில் வெற்றியைப் பதிவு செய்திருக்கும் ஸ்வியாடெக், வீனஸ் வில்லியம்ஸின் சாதனையை சமன் செய்துள்ளாா். இப்போட்டியில் 4-ஆவது சுற்று தவிா்த்து இதர அனைத்து சுற்றுகளிலுமே நோ் செட்களில் வென்றிருக்கிறாா் ஸ்வியாடெக்.

மறுபுறம், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் ஃபைனலுக்கு முன்னேறியிருந்த கோகோ கௌஃப் தோல்விக்காக கண்ணீா் சிந்தினாா். ஒற்றையா் பிரிவில் தோற்றாலும், இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில் அவா் ஞாயிற்றுக்கிழமை களம் காண இருக்கிறாா். வெற்றிக்குப் பிறகு பேசிய ஸ்வியாடெக், ரஷியாவின் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தாா்.

நடாலுடன் மோதும் ரூட்: இதனிடையே, ஆடவா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது அரையிறுதியில் நாா்வேயின் கேஸ்பா் ரூட் 3-6, 6-4, 6-2, 6-2 என்ற செட்களில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் முதல் நாா்வே போட்டியாளா் என்ற பெருமையைப் பெற்ற ரூட், அதில் நடாலின் சவாலை ஞாயிற்றுக்கிழமை சந்திக்க இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com