டேரில் மிட்செல் 190: நியூசிலாந்து 553 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

​இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 553 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
டேரில் மிட்செல் 190: நியூசிலாந்து 553 ரன்களுக்கு ஆட்டமிழப்பு


இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 553 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கேன் வில்லியம்சனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், இந்த ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. அவருக்குப் பதில் டாம் லாதம் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் 81 ரன்களுடனும், டாம் பிளண்டல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த இணை இரண்டாவது நாளான இன்றும் (சனிக்கிழமை) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் மிட்செல் சதத்தை பூர்த்தி செய்ய, முதல் ஆட்டத்தில் சதத்தைத் தவறவிட்ட பிளண்டலும் பிறகு சதத்தை எட்டினார். இதன்மூலம், அணியின் ஸ்கோர் 400-ஐ தாண்டியது.

சதமடித்த சிறிது நேரத்திலேயே பிளண்டல் 106 ரன்களுக்கு ஜேக் லீச் சுழலில் ஆட்டமிழந்தார். மிட்செல், பிளண்டல் இணை 5-வது விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்தது.

இதன்பிறகு, மைக்கேல் பிரேஸ்வெல் நல்ல ஒத்துழைப்பு தந்து விளையாட மிட்செலும் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு மேலும் நெருக்கடியைத் தந்தார். 150 ரன்களை தாண்டிய மிட்செல் 200 ரன்களை நோக்கி விளையாடினார்.

மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரேஸ்வெல் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கைல் ஜேமிசன் வந்த வேகத்தில் 3 பவுண்டரிகள் அடித்து 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

டிம் சௌதி 1 பவுண்டரி அடித்து 4 ரன்களுக்கும், மேட் ஹென்ரி முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய டிரென்ட் போல்ட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிட்செலுக்கு ஒத்துழைப்பு தந்தார். லீச் ஓவரில் பவுண்டரிகள் அடித்து ரன் சேர்த்து வந்த அவர் 16 ரன்கள் எடுத்தார்.

மிட்செலும் இதனை பயன்படுத்தி 200-ஐ நெருங்கினார். அணியின் ஸ்கோரும் படிப்படியாக உயர்ந்து 550-ஐ தொட்டது. ஆனால், 190 ரன்கள் எடுத்திருந்தபோது மேத்யூ பாட்ஸிடம் விக்கெட்டை இழந்தார் மிட்செல்.

இதன்மூலம், நியூசிலாந்து அணி 553 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், ஸ்டுவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜேக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மேத்யூ பாட்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com