ரூ. 16 லட்சம் சம்பளத்தில் இந்தியக் கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்!

இப்பணியில் ஈடுபடுவது ஒரு ஜோதிட நிறுவனம் என்பது தெரிய வந்தது என்று கூறியுள்ளார்.
ரூ. 16 லட்சம் சம்பளத்தில் இந்தியக் கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்!

ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடியதற்கு வீரர்களின் திறமை தான் காரணம் என நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால் பின்னணியில் வேறொரு விஷயம் நடைபெற்றுள்ளது. 

ஏஎஃப்சி ஆசியக் கோப்பை பிரதான போட்டிக்கு இந்திய அணி சமீபத்தில் தகுதியடைந்தது. கம்போடியா, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளை சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது. இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தி நன்றாக விளையாடுவதற்காக ரூ. 16 லட்சம் செலவழித்து ஜோதிட நிறுவனத்தை அகில இந்தியக் கால்பந்து சம்மேளனம் நியமித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியைச் சேர்ந்த ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஆசியக் கோப்பைப் போட்டிக்கு முன்பு அணி வீரர்களுக்கு ஊக்கமூட்டுபவராக ஒருவர் நியமிக்கப்பட்டார். பிறகுதான் இப்பணியில் ஈடுபடுவது ஒரு ஜோதிட நிறுவனம் என்பது தெரிய வந்தது என்று கூறியுள்ளார். இந்திய வீரர்களிடம் மூன்று முறை அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர் உரையாடியதாகவும் தெரிகிறது. தேசிய விளையாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு இந்தியக் கால்பந்து சம்மேளனத்தைக் கடந்த மாதம் முதல் நிர்வகித்து வருகிறது. 

இந்திய முன்னாள் கோல்கீப்பர் தனுமாய் போஸ், அகில இந்தியக் கால்பந்து சம்மேளனத்தின் இந்நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ளார். இளைஞர்களுக்கான பல போட்டிகளை கால்பந்து சம்மேளனம் நடத்தவில்லை. பல முக்கியப் போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் இதுபோன்ற செயல்கள் இந்தியக் கால்பந்தின் நற்பெயரைக் கெடுப்பதாக உள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்களை நிர்வாகக் குழு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com